சிறுகதை

நகர வாழ்க்கை – ராஜா செல்லமுத்து

நீலகண்டன் தெருவில் உள்ள முருகன் கடையில் ஆட்கள் கூடி நின்று கொண்டிருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மற்ற கிழமைகளை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் ஒருமித்து நின்று கொண்டிருந்தவர்களுக்கு இடையில் ஜெயசீலன் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான்.

” அண்ணா பத்து ரூபா தயிர் ஒன்னு கொடுத்துடுங்க . அப்படியே கருவேப்பிலையும் கொடுங்க” என்று கேட்டபோது

“தம்பி எல்லா பொருளையும் எழுதி வச்சிட்டு வந்து வாங்குங்க. ஒவ்வொன்னா கேட்டுகிட்டு இருந்தா மத்தவங்க வாங்க வேண்டாமா? என்று ஒரு பெண் குரல் கொடுக்க

” பெண்களிடம் பேசினால் கடைசியில் விபரீதம் தான் நிகழும் ” என்று நினைத்த ஜெயசீலன் எதுவும் பேசாமல் தன்னுடைய மொத்தப் பொருளையும் வாங்கிக் கொண்டு திரும்பிய போது அங்கு ஒரு போலீஸ்காரர் திடீரென்று வந்தார்.

“பிளாஸ்டிக் பை இருக்கா” என்று கேட்க

“யாரது ? என்று கடையில் நின்று கொண்டிருந்த அத்தனை பேரும் திரும்பிப் பார்க்க காக்கி உடையில் கம்பீரமாக நின்று கொண்டு இருந்தார் ஒரு போலீஸ் .

” இல்ல சார் இங்க பிளாஸ்டிக் வைக்கிறதில்ல ” என்று முருகன் சொல்ல

‘‘அப்படின்னா வீட்ல இருந்துதான் எல்லாரும் பைய எடுத்துட்டு வராங்களா? என்று இளக்காரச் சிரிப்பில் கேட்ட போலீசாரின் பேச்சுக்கு பயந்த

முருகன் பிளாஸ்டிக்கில் இருந்த மிட்டாயை கீழே கொட்டி விட்டு

“இந்தாங்க சார்” என்று கொடுத்தான். அதை வாங்கிய போலீஸ்காரர் .ஒரு பூட்டு சாவியை அந்த பிளாஸ்டிக் உள்ளே போட

” என்ன இது?பிளாஸ்டிக்கில பூட்ட போடறாரு?” என்று ஆச்சரியமாகக்கேட்டார்கள் கடையில் நின்று கொண்டு இருந்தவர்கள்

” உங்களுக்கு விஷயம் தெரியாதா?” என்று எதிர் கேள்வி கேட்டார் அந்தப் போலீஸ்காரர்.

” தெரியாது சார்”என்றனர் கடையில் இருந்தவர்கள் .

“அதான்ய்யா டவுனுக்கும் கிராமத்துக்கு உள்ள வித்தியாசம். நீங்க ஞாயிற்றுக்கிழமைன்னு சிக்கன், மட்டன் சமைச்சு திங்க ரெடியா இருக்கீங்க? உங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு கணவனும் மனைவியும் செத்து ரெண்டு நாள் ஆச்சு .அது தெரியாம வாய்க்கு வக்கனையா சாப்பிடுறதுக்கு சமையல் சாமான் வாங்கிட்டு இருக்கீங்க? என்று அந்த போலீஸ்காரர் கேட்டபோது ஜெயசீலனுக்கு சுருக்கு என்று உரைத்தது

” சார் என்ன சொல்றீங்க ?என்று அந்த போலீஸ்காரரிடம் ஜெயசீலன் கேட்க

“மேல மாடியில ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு புருஷன் பொண்டாட்டி மண்ணெண்ணய ஊத்தி தீ வச்சு செத்துப் போய்ட்டாங்க ரெண்டு நாளா வீட்ல இருந்து வெளியே வரலைன்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொல்லி சொல்லி நாங்க இப்போ வந்து பூட்டத் திறந்து பார்க்கும்போது ரெண்டு பேரும் எரிஞ்சு செத்துக் கிடக்கிறாங்க. நீங்க என்னடான்னா பொணத்துக்கு கீழ சுவையா சாப்பிடுறதுக்கு பலசரக்கு சாமான் வாங்கிகிட்டு இருக்கீங்க?. ” என்றார் அந்த போலீஸ்காரர் .

.அங்கு நின்ற பெண்களின் முதுகில் சாட்டை எடுத்து அடிப்பது போல் இருந்தது.

” என்ன சார் சொல்றீங்க?” என்று அங்கிருந்தவர்கள் ஆச்சரியமும் வியப்பும் கலந்து கேட்டார்கள். அதற்குள் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே இறந்து கிடந்த தம்பதிகள் இறக்கப்பட்டார்கள்.

“வெளியூர்ல இருந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இங்கே வந்து தங்கினாங்க. கடன் பிரச்சனை. பாவம் தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டாங்க” என்று அவர்கள் சொல்ல

” அடப்பாவிகளா நம்ம வீட்டுக்கு பக்கத்துல ரெண்டு பேரு செத்து ரெண்டு நாள் ஆச்சு. . என்ன ஏதுன்னு கூட நமக்கு தெரியல. என்ன வாழ்க்கை இது? இதே கிராமமாக இருந்தா அஞ்சு நிமிஷத்துல அத்தனை விஷயமும் அத்துபடியாக தெரிஞ்சு போகும். இதுதான் நரகத்திற்கும் கிராமத்துக்கும் உள்ள வித்தியாசமான வாழ்க்கை ” என்று நொந்தபடியே சமைப்பதற்கு வாங்கிய சாமான்களை எடுத்துவந்து வீட்டில் வைத்தான் ஜெயசீலன் .

அவனால் அன்று சமைக்க முடியவில்லை. அந்த போலீஸ்காரர் சொன்ன வார்த்தைகளே திரும்பத் திரும்ப அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ‘ஆயிரம் தான் ஆச்சரியங்கள் நகரத்தில் இருந்தாலும் அமைதியான வாழ்க்கை கிராமம் தான் ‘ என்று மனதில் நினைத்த ஜெயசீலன் அன்று சமைக்காமல் பட்டினியாகவே இருந்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *