செய்திகள்

தி.மு.க. – அண்ணா தி.மு.க. 18 இடங்களில் நேரடி மோதல்

சென்னை, மார்ச் 21–

அண்ணா தி.மு.க.வும் – தி.மு.க.வும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. அண்ணா தி.மு.க. கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வுக்கும், அண்ணா தி.மு.க.வுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

தி.மு.க. போட்டியிடும் மற்ற 3 தொகுதிகளில் மத்திய சென்னை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு எதிராகவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு எதிராகவும் களம் காண்கிறது.

அதேபோல் அண்ணா தி.மு.க. தாங்கள் போட்டியிடும் 33 தொகுதிகளில் தி.மு.க.வோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.

ம.தி.மு.க.வுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும், கொங்கு மக்கள் கட்சிக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது.

சில தொகுதிகளில் தி.மு.க., அண்ணா தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. அதில் திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தே.மு.தி.க.வும் மோதிக்கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *