சிறுகதை

செருப்பு – ராஜா செல்லமுத்து

அழகான ஒரு பெண்ணின் தங்கப் பாதங்களைச் சுமந்து சென்ற இரண்டு செருப்புகளில் ஒன்று அறுந்து கிடந்தது. ஒன்று நன்றாக இருந்தது .கேட்பாரற்று கிடந்த அந்தச் செருப்புகளை யாரும் கொள்வார் இல்லை. இதற்கு முன்னால் எத்தனை இடங்களுக்கு போய் வந்தது. அவள் பொன்னுடலைத் தாங்கிய அந்தச் செருப்பு, பூப்போன்ற பாதங்களைச் சுமந்த களைப்பில் ஓய்வெடுத்து கிடக்கின்றனவா? இல்லை கோவிலுக்குள் செல்வதற்கு அந்த தங்கச் சிலை தன் செருப்புகளை வெளியே கழட்டி விட்டு சென்றிருக்கிறாளா? அதெல்லாம் இல்லை. ஒரு செருப்பு நன்றாக இருந்தது. ஒரு செருப்பு அறுந்திருந்தது.அதனால் நன்றாக இருக்கும் செருப்போடு அருந்த செருப்பையும் உதறிவிட்டு சென்றிருந்தாள்அந்த அழகி.

அறுந்த செருப்பு நன்றாக இருக்கும் செருப்பைப் பார்த்து லேசாக சிரித்தது .

ஏன் நான் தானே அறுந்து விட்டேன்; நீ அவள் பாதங்களில் போய் ஓட்டிக் கொண்டு செல்லலாமே 2 :ஏன் என்னுடனே நீயும் உட்கார்ந்திருக்கிறாய்? உனக்குத்தான் எதுவும் பிரச்சனை இல்லையே? நீ அவள் பாதங்களில் ஒட்டி பவனி வரலாமே? அறுந்த என்னோடு ஏன் அண்டி இருக்கிறாய்? என்று அறுந்த செருப்பு ஆவலாகக் கேட்டது. அதை பார்த்துக் கடகடவெனச் சிரித்த நல்ல செருப்பு

“அடே முட்டாளே நான் நன்றாக தான் இருக்கிறேன். ஆனால் என்னுடன் பவனி வந்தது நீயல்லவா பாதகமாகிக் கிடக்கிறாய்? எனக்கு ஒன்றும் இல்லை தான். என்னை அணிந்து செல்லலாம் .ஆனால் நீ சரியில்லையே? நீ அறுந்து கிடக்கிறாய் .நீ ஒரு பாதங்களுக்கு ஒட்டவில்லை என்பதால் தான் ஒட்டிக் கிடந்த எண்ணையும் உன்னோடு சேர்த்து உதறிவிட்டு இருக்கிறார்கள்” என்று கொஞ்சம் கோபமாகச் சொன்னது நல்ல செருப்பு.

” ஏன் என்னை குற்றம் சொல்கிறாய்? நான் தான் அறுந்து விட்டேனே? என்னைத் தூக்கி வீசிவிட்டு அது போல இன்னொரு செருப்பை வாங்கிக் கொண்டு உன்னையும் சேர்த்துக் கொள்ளலாமே? என்று எதிர் கேள்வி கேட்டது அறுந்த செருப்பு.

” இந்த உலகத்தில் யாரும் ஒற்றைச் செருப்பு விற்பது இல்லை ? இரண்டு செருப்புகளைத் தானே விற்கிறார்கள். நீ சிந்திப்பது போல ஒரு செருப்பை விற்கிறார்கள் என்றால் உன்னை மாதிரி கோடிக்கணக்கான அறுந்த செருப்புகளைத் தூக்கி எரிந்து விட்டு ஒரு செருப்பை விற்பனை செய்வார்கள் அந்த நிலைமை இங்கு வரவில்லை அறிவு கெட்டவனே ?என்று திட்டியது நல்ல செருப்பு.

அது என்னவோ சில விஷயங்கள் ஜோடி சேரும்போதுதான் நன்றாக இருக்கிறது .நீ அறுந்து கிழிந்து எதற்கும் உதவாமல் கிடக்கிறாய்? ஆனால் நான் எல்லாம் இருந்து உன்னோடு சேர்ந்ததால் எதற்கும் உதவாமல் கிடக்கிறேன். நீ சரியாக இருந்திருந்தால் நானும் சரியாக இருந்திருப்பேன். என்ன செய்ய? என்று எதிர்வாதம் செய்தது நல்ல செருப்பு.

” நான் வேண்டுமானால் தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று சொன்னது அறுந்த செருப்பு .

“நீ தற்கொலை செய்து கொண்டாலும் என்னை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. உன்னைப் போலவே நானும் உதவாக்கரையாக தான் இருக்க வேண்டும்.

ஏ அறுந்த செருப்பே அளவாகப் பேசு. எதற்கும் உதவாத நீயே இவ்வளவு பேசித் திரிகிறாய்? உதவும் நான் எதுவும் வாய் திறப்பதில்லை .சில மனிதர்களும் உன்னைப் போல தான் எதற்கும் உதவாவிட்டாலும் வாய் மட்டும் பேசித் திரிகிறார்கள்.. உதவும் மனிதன் எவனும் வாய் திறந்து பேச மாட்டான் .நன்றாக இருக்கும் சில மனிதர்கள் கூட உன்னைப்போல அறுந்து கிடக்கும் செருப்போடு சேர்வதால் அவர்களும் தங்களை பலவீனமற்றவர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

அறுந்த உன்னைத் தூக்கி எறிந்து விட்டு, ஒற்றைச் செருப்பை வாங்கிக் கொள்ளலாம் என்று செருப்பு உற்பத்தியாளர்கள் நினைக்கும் போது, உன்னை போல உதவாக்கரை மனிதர்களும் ஓடி ஒளிவார்கள். அதுவரையில் அறுந்து கிடக்கும் உன்னோடு, நன்றாக இருக்கும் நானும் அந்தத் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும் .எல்லாம் சில காலம் தான் .மாற்றம் நிச்சயம் நிகழும் ” என்று கவலையோடு சொன்னது நல்ல செருப்பு.

நல்ல செருப்பையும் முடக்கி விட்டதாக கௌரவம் கொண்டது அறுந்த செருப்பு

தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் சேர்த்துக் கெடுத்ததாம் குரங்கு என்ற பழமொழி போல என்னையும் கெடுத்து விட்டு சிரிக்கிறாயா? என்றது நல்ல செருப்பு.

தன்னோடு சேர்ந்து எந்த வேலையும் செய்யாமல் நல்ல செருப்பையும் முடக்கி விட்டதாக கை கொட்டி ஏளனமாக சிரித்தது அறுந்த செருப்பு .

சிரி மகனே சிரி . காலம் ஒருநாள் மாறும் .அப்போது அறுந்த உன்னையும் சேர்த்துக் கொண்டுதான் நான் பயணப்பட ஆசைப்படுவேன் .உன்னைப் போல நான் இருக்கப் போவதில்லை. யாராவது ஒரு மனிதன் உன்னை செம்மைப்படுத்தினால் நானும் உன்னோடு சேர்ந்து கொள்வேன். அறுந்த உன்னைத்தான் சீர்படுத்த வேண்டும் .அப்போது நான் சேர்ந்து கொள்வேன். முதலில் உன்னைச் சீர்படுத்துவதற்கு முயற்சி செய்” என்று சிந்திக்க வார்த்தையைச் சொல்லி மௌனமானது நல்ல செருப்பு.

அதுவரையில் நல்ல செருப்பையும் முடக்கி விட்டதாக நினைத்துச் சிரித்து கொண்டிருந்த அறுந்த செருப்பு இப்போது அமைதியானது.

#சிறுகதை

Loading

One Reply to “செருப்பு – ராஜா செல்லமுத்து

  1. செருப்பு பேசுவது போல் தத்துவம் மூலமாக விஷயங்களை வெளிப்படுத்திய ஆசிரியருக்கு சல்யூட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *