செய்திகள்

சவுக்கு சங்கரைத் தொடர்ந்து யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை

சென்னை, மே 14–

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பெலிக்ஸ் சென்னை ஐகோர்ட்டில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான விசாரணையின் போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முன்ஜாமீன் எதுவும் வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தனர். இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைத்து பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து ரயில் நிலையத்திலிருந்து காவல்துறை வாகனம் மூலம் உரிய பாதுகாப்புடன் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்வதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருச்சி அழைத்து வரப்பட்டு அங்குள்ள மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து பெலிக்ஸ் ஜெராலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா முன்பு பெலிக்ஸ் ஜெரால்ட் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பெலிக்சை மே 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை தனது யூடியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட பழனிச் செட்டிபட்டி காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேர சோதனைக்கு பிறகு லேப்டாப், செல்போன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், பென் டிரைவ் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *