செய்திகள்

சத்தீஷ்கார், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு

புதுடெல்லி, டிச.1-

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஷ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் இறுதி மாநிலமாக தெலுங்கானாவில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகிற 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இதற்கிடையே 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் எடுத்து வந்தன. பரபரப்பான இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று மாலையில் வெளியிடப்பட்டன.

அதன்படி மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாரதீய ஜனதாவும், தெலுங்கானா மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரசும் புதிய அரசை அமைக்கும் என தெரியவந்துள்ளது. மிசோரமில் எதிர்க்கட்சியான சோரம் மக்களின் இயக்கம் ஆட்சியமைக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ஜன் கி பாத் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பாரதீய ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.

அதேநேரம் ரிபப்ளிக் டி.வி. மற்றும் மாட்ரிஸ் இணைந்து வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் 118 முதல் 130 இடங்கள் வரை பாரதீய ஜனதாவுக்கும், 97 முதல் 107 இடங்கள் வரை காங்கிரசுக்கும் கிடைக்கும் என கூறப்பட்டு இருக்கிறது.

டுடேஸ் சாணக்யா நிறுவனம், பாரதீய ஜனதா 151 (12 இடங்கள் கூடுதல் அல்லது குறையும்) தொகுதிகளையும், காங்கிரஸ் 74 (12 இடங்கள் கூடுதல் அல்லது குறையும்) தொகுதிகளையும் கைப்பற்றும் என கணித்து இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 தொகுதிகளில் வெற்றி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான்

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அங்கு 100 இடங்களை கைப்பற்றும் கட்சி அடுத்த அரசை அமைக்க முடியும்.மாநிலத்தில் இந்தியா டுடே–ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பில் 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பாரதீய ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், பிற கட்சிகள் 9 முதல் 18 இடங்கள் வரை பிடிக்கும் என்றும் தெரிய வந்திருக்கிறது.

ரிபப்ளிக் டி.வி. மற்றும் மாட்ரிஸ் நிறுவனம், காங்கிரஸ் 65–75 இடங்களையும், பாரதீய ஜனதா 115–130 இடங்களையும் பிடிக்கும் என குறிப்பிட்டு இருக்கிறது.

டைம்ஸ் நவ் இ.டி.ஜி.யின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 56–72 தொகுதிகளும், பாரதீய ஜனதா 108–128 தொகுதிகளும் பெறும் என தெரிய வந்துள்ளது. ஜிஸ்ட்–டிப்–நய் நிறுவனமோ காங்கிரஸ் 70ம், பாரதீய ஜனதா 110 இடங்களும், மீதமுள்ள தொகுதிகளில் மற்ற கட்சிகளும் வெற்றி பெறும் என கணித்து இருக்கிறது.

சத்தீஷ்கார்

காங்கிரஸ் ஆளும் சத்தீஷ்காரில் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை.இங்கு ஏ.பி.பி. நியூஸ் – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரசுக்கு 41–53 இடங்களும், பாரதீய ஜனதாவுக்கு 36–48 இடங்களும் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே– ஆக்சிஸ் மை இந்தியாவோ, காங்கிரஸ் 40–50 தொகுதிகளும், பாரதீய ஜனதா 36–46 இடங்களும் பெறும் கணித்து இருக்கிறது.

ரிபப்ளிக் டி.வி-மாட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 44–52 இடங்களும், பாரதீய ஜனதா 34–42 இடங்களும் வெல்லும் என தெரியவந்துள்ளது.

இந்தியா டிவி–சி.என்.எக்ஸ் நிறுவனம் காங்கிரஸ் 46–56 இடங்களும், பாரதீய ஜனதா 30–40 இடங்களும் பெறும் என குறிப்பிட்டு உள்ளது.

தெலுங்கானா

119 இடங்களை கொண்ட தெலுங்கானாவில் 60 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்க முடியும். அங்கு இந்தியா டிவி-சி.என்.எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 63–79 இடங்களும், பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) 31–47 இடங்களும், பாரதீய ஜனதா 2–4 இடங்களும் பெறும் என குறிப்பிட்டு உள்ளது.

ஜன் கி பாத் நிறுவனம் காங்கிரசுக்கு 48–64 தொகுதிகள் எனவும், பி.ஆர்.எஸ். 40–55 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 7–13 தொகுதிகள் எனவும் கணித்து இருக்கிறது.

ரிபப்ளிக் டி.வி–மாட்ரிஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 58–68 இடங்கள், பி.ஆர்.எஸ். 46–56 இடங்கள், பாரதீய ஜனதா 4–9 இடங்கள் வெல்லும் என தெரிய வந்துள்ளது.

மிசோரம்

40 இடங்களை கொண்ட மிசோரமில் ஆட்சியமைக்க 21 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எப்.) 14–18 இடங்களும், சோரம் மக்களின் இயக்கம் (இசட்.பி.எம்.) 12–16 இடங்களும், காங்கிரஸ் 8–10 இடங்களும், பாரதீய ஜனதா 2 இடங்களும் பெறும் என இந்தியா டி.வி–சி.என்.எக்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு தெரிவித்து உள்ளது.

ஏ.பி.பி. நியூஸ்-சி.வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் எம்.என்.எப். 15–21 தொகுதிகள், இசட்.பி.எம். 12–18 தொகுதிகள், காங்கிரஸ் 2–8 தொகுதிகள் பெறக்கூடும் என கண்டறியப்பட்டு உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *