செய்திகள்

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறப்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

முதல் நாளே புத்தகங்கள் வழங்கப்பட்டன

சென்னை, ஜூன்.10-

கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு முதல் நாளே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ந் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் வந்ததால், இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.

அதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ந் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23ந் தேதி வரையும் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ந் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4ந் தேதி வெளியாக இருந்ததால், 6ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

இதனிடையே கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிப்போடுமாறு எழுந்த கோரிக்கைகளை அடுத்து, 10ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வளாக பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகளை பள்ளிகள் தரப்பில் முடிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கோடை விடுமுறை சந்தோஷமாக கழித்த மாணவர்கள் இன்று பள்ளி வாசலை தொட்டதுமே பரவசம் ஆனார்கள். தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து உற்சாகத்துடன் வணக்கத்தை தெரிவித்தனர். அவர்களிடம் ஆசிரியர்கள் நலம் விசாரித்தனர்.

புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் மாணவ–மாணவிகள் வகுப்புக்குள் நுழைந்தனர். அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோடை விடுமுறைக்கு பின்னர் வந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இனிப்பு வழங்கியும் வரவேற்றனர்.

மாணவர்களுக்கு

உற்சாக வரவேற்பு

கோவை மசக்காளி பாளையம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் மேளதாளத்துடன் இனிப்புகள் வழங்கி, பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள், ரோஜா மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் இன்றே வழங்கப்பட்டன. அந்த வகையில் 70 லட்சத்து 67 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

கல்வியாண்டை உற்சாகமாக தொடங்க உதவும் வகையில், கல்வியாண்டின் முதல் நாளிலேயே இவை வழங்கப்பட்டன. இது தவிர்த்து, தமிழக அரசின் சார்பில் புத்தகப்பை, காலணி, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில் மற்றும் கிரையான்கள், ஜாமின்ட்ரி பாக்ஸ் உள்ளிட்டவையும், அவை அவசியப்படும் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

மேலும், புதிய இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கனவே உள்ள பழைய அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் கட்டணமின்றி அரசு பஸ்களில் சீருடையுடன் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *