செய்திகள்

காஞ்சீபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கையில் புதிய தொழிற்பேட்டைகள்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை, ஜூன்29-

காஞ்சீபுரம், திண்டுக்கல், தூத்துக்குடி, சிவகங்கையில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.

சட்டசபையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு சிட்கோ மூலம் காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் திருமுடிவாக்கத்தில் 2.47 ஏக்கரில் ரூ.2.50 கோடி திட்ட மதிப்பில் புதிய குறுந்தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கொத்தயத்தில் 53.50 ஏக்கரில் ரூ.16.58 கோடி செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் சங்கராப்பேரியில் 23 ஏக்கரில் ரூ.6.51 கோடி செலவிலும், சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாங்குளத்தில் 10 ஏக்கரில் ரூ.2.70 கோடி மதிப்பிலும் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.2.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 600 சதுர அடியில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.

விருதுநகர் சிட்கோ தொழிற்பேட்டையில் 4 ஆயிரத்து 250 சதுர அடி பரப்பில் ரூ.1.83 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும்.

தாய்கோ வங்கி கடனுக்கான வட்டி 10 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு ஒரு நிறுவனத்துக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் வகையில் கலைஞர் கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி தாய்கோ வங்கியால் ஒதுக்கப்படும்.

நீடித்த நிலையான பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் சிறப்பு முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும்.

உலக முதலீட்டாளர் மாநாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயலாக்குவதற்கு உயர்நிலை அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்படும்.

சென்னை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் வேலூர் மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும். மதுரை மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மதுரை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டல குறு, சிறு நிறுவன வசதியாக்க மன்றங்களாக செயல்படும்.

6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு ஊக்குவிக்கும் வகையில், வரும் நிதியாண்டில் ரூ.4.11 கோடி மதிப்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது இந்த ஆண்டு முதல் 500 மாணவர்களை கொண்ட கல்வி கழகமாக உருவாக்கிடும் பொருட்டு, ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படும்.

46 ஆயிரம் பேருக்கு…

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி பேசினார். இதற்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 5,068 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

கடந்த 5 மாதங்களில் 1,277 நிறுவனங்கள் ரூ,13 ஆயிரம் கோடி முதலீடு செய்து, உற்பத்தியை தொடங்கியுள்ளது. சுமார் 46 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *