செய்திகள்

எத்தியோப்பிய, சோமாலிய அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து: 49 பேர் பலி

ஏமன், ஜூன் 12–

எத்தியோப்பிய, சோமாலிய அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளானதில் ஏமனில் 49 பேர் பலியானார்கள்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறது. ஏமனில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தாலும், அங்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2021-ல் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 27,000 பேர் என்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு 90,000-க்கும் அதிகமானோர் ஏமனில் புலம்பெயர்ந்து குடியேறியிருக்கிறார்கள். கடந்த மாத கணக்கீட்டின்படி சுமார் 3,80,000 புலம் பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர்.

49 பேர் பலி

இவர்களில் பெரும்பகுதியினர் செங்கடல், ஏடன் வளைகுடாவின் குறுக்கே அளவுக்கு அதிகமான மக்களை ஏற்றிச் செல்லும் கடத்தல் காரர்களின் படகுகளில் வந்தவர்கள். இதுபோன்ற பயணத்தில் விபத்துகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள், எத்தியோப்பியர்களை ஏற்றிச் சென்ற படகு ஏடன் வளைகுடா வழியாக பயணமானபோது, ஏமனின் தெற்கு கடற்கரையில் நேற்று முன்தினம் மூழ்கி விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த விபத்தில் 31 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட 49 பேர் உயிரிழந்ததாகவும், இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காணாமல் போன 140 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், ஏமனுக்கு குடிபெயர்பவர்களை ஏற்றிப் பயணமான 2 கப்பல்கள், ஜிபூட்டி கடற்கரையில் விபத்துக்குள்ளானது. அதில் குறைந்தது 62 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து, தற்போதும் அதுபோன்றதொரு துயரச் சம்பவம் நடந்திருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *