சிறுகதை

மகிழ்ச்சி | ராஜா செல்லமுத்து

Spread the love

வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே முடங்கிப்போய்க் கிடக்கும் லிங்கத்திற்குப் போதும் போதுமென ஆகிவிட்டது. எப்படா வீட்ட விட்டு வெளியே போவோம் என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கி நின்றது.
அறுபத்து நான்கு வீடுகள் அடைத்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அவருக்கு ஒரு திறந்த வெளிச்சிறையாகவே தென்பட்டதேயொழிய அவர் சிறகு விரித்துப் பறக்கும் வானமாக அது வசப்படவே இல்லை.
உள் வீடு , வெளி வீடு , வராண்டா என்ற அடிப்படை அறைக்குள்ளேயே கழிந்து கொண்டிருக்கிறது அவரின் ஆயுட்காலம். இதை விட்டு விடுதலையாகி வெளியே வரலாம் என்றால் அதற்கு வயோதிகம் வழி விடுவதே இல்லை. அப்படியே வீட்டை விட்டு ஒரு படி கீழே இறங்கினார்.
‘‘என்ன.. ஆரம்பிச்சாச்சா..? வயசான காலத்தில ஏன் இப்படி.. எங்கயாவது விழுந்திட்டா.. என்ன பண்றது..? பேசாம உட்காருங்க..’’ என மனைவி பார்வதி எச்சரித்தார்.
‘‘இல்ல.. பார்வதி வீட்டுக்குள்ளயே இருக்கேனா..? அதான் ஒரு மாதிரியா இருக்கு.. அப்படியே காலாற கொஞ்ச நேரம் போயிட்டு வரவா..?’’ லிங்கம் அனுமதி கேட்டாலும் அவர் வெளியே போய் வர அனுமதி கிடைப்பதே இல்லை.
‘‘இல்ல வேணாமே.. – நீங்க கீழே போகணும்னா.. ஒங்க கூட ஒரு ஆளு துணைக்கு வரணும் அது மட்டுமில்ல, இப்ப கொஞ்சம் பனி ஓவரா இருக்கு.. ஏற்கனவே ஒடம்பெல்லாம் சளி.. இன்னும் கொஞ்சம் இழுத்திட்டு வரணுமா..? வேண்டாங்க..’’என்று பார்வதி சொன்னதும் படர்ந்து விரிந்த லிங்கத்தின் முகம் கொஞ்சமாய்ச் சுருங்கியது.
‘‘பார்வதி..’’ என்று லிங்கம் கொஞ்சும் குரலில் கொஞ்சம் இழுக்க
‘‘என்ன..?’’ என்று எச்சரிக்கை கலந்தே கேட்டார் பார்வதி.
‘‘நீயும் வெளியில போற.. பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு பேரும் அவங்கவங்க ரூம்ல இருந்துக்கிறாங்க.. சின்னப்பையன் ஸ்கூலுக்கு போயிர்றான். நான் மட்டும் தனியா வீட்டுக்குள்ளயே இருக்கிறதுக்கு ஒரு மாதிரியா இருக்கு பார்வதி..’’ என்று லிங்கம் இழுக்க
‘‘சரி.. போயிட்டு வாங்க..’’ என்று பார்வதி அனுமதி கொடுக்க சிட்டாய்ப் பறந்து போக ஆசைப்பட்டவரின் கால்கள் எட்டு வைத்து நடக்க ஆரம்பித்தது. மனதிற்குள் ஒரு மல்யுத்த வீரனாய் நினைக்கும் லிங்கம் நிஜத்தில் கொஞ்சம் வலுவிழந்தே இருந்தார்.
இரண்டாவது தளத்திலிருந்து லிப்டில் ‘சர்’ என இறங்கி தரைத்தளத்திற்குச் சென்றார் லிங்கம்.அங்கு அவரைப் போன்ற சில வயோதிக மனிதர்களுடன் பேசிச்சிரிச்சு, உறவாடிவிட்டு அவர் மேலே வரும் போது இரவைத் தொட்டு நிற்கும் . அவர் அப்படி வெளியே பேசிக் கொண்டிருக்கும் போது லிங்கத்தை பால்கனியில் நின்று எட்டிப் பார்க்க பார்வதி தவறியதில்லை.
‘எப்பிடியிருந்த மனுசன் அவரோட பேச்சும் நடையும் எப்பிடியிருக்கும் இப்ப இப்படியிருக்காரே..’ என்று நினைக்கும் பார்வதியின் கண்கள் சில நேரங்களில் பணிக்கும்.
பேசி முடித்து அவர் மேலே வரும் போது கொஞ்சம் கண்டிப்புக் குரலில் பேசும் பார்வதிக்கு உள்ளுக்குள் உற்சாகம் ஊறியே கிடக்கும்.
‘‘என்ன.. ஊர்சுத்திட்டு வந்தாச்சா..?’’ என்று உதட்டளவில் பேசினாலும் உள்ளத்தில் ஊறும் உற்சாகத்தை வெளியே கொண்டு வரவே மாட்டார்.
‘‘ஆமா பார்வதி.. பிரண்ட்ஸ் கூடப் பேசனா.. கொஞ்சம் சந்தோசமா இருக்கு. அதான்..’’ என்று கொஞ்சம் குழந்தையாக மாறிப்பேசும் லிங்கத்தைக் குழந்தை போலவே பாவிப்பார் பார்வதி.
இப்படியாய் நாட்களும் வாரங்களும் உருண்டோடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இப்போதல்லாம் லிங்கத்தை வீட்டை விட்டு வெளியே செல்ல பார்வதி அனுமதிப்பதில்லை.
‘‘பார்வதி.. – பார்வதி..’’ என – உரத்த குரல் கொஞ்சம் சுரம் குறைந்து சன்னக் குரலில் பேசும் லிங்கத்திடம்
‘‘என்ன ..?’’ என்று ஆறுதல் வார்த்தைகளால் கேட்ட பார்வதியிடம்
‘‘என்ன பார்வதி போயிட்டு வரவா..?’’ என்று இழுத்த லிங்கத்திடம்
‘‘எப்பிடி போவீங்க..! இப்ப நடக்க முடியலயே.. வேணாம் – வீட்டுலயே இருங்க..’’பார்வதி எச்சரிக்கும் அன்புக் கட்டளையை விட்டு அவர் மீறிப்போவதே இல்லை. தினமும் அவரின் அறையில் அவர். மற்றவர்கள் அவரவர்கள் அறையில் .சுத்தமாய் பேச்சற்றுப்போன லிங்கம் மெளனமே சாட்சியாக இருந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் கூட அதிகம் பேசுவதில்லை -பள்ளிக்குப் போய் வரும் விச்சுவுக்குக் கூட லிங்கத்துடன் பேசுவதற்கு நேரம் வாய்ப்பதில்லை.
‘‘ஏங்க.. பேசுங்க.. ஏன்? இப்படி உம்முன்னு இருக்கிங்க..’’ என்று நாளுக்கு இரண்டொரு முறை கேட்டும் பார்வதி கூட மெளனமாகவே இருந்தார்.
ஒரு விடுமுறை நாளில் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்திருந்த விச்சு எத்தனையோ சேனல்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தும் திருப்தி கொள்ளாதவன், டிவி முழுவதும் ஒரே படத்தைப்போட்டு அதில் எது வித்யாசமான படம் என்று கண்டுபிடிக்கும் விளையாட்டைப் போட்டு, அவன் கண்டு பிடித்து விளையாட, வீட்டின் ஒவ்வொரு அறையிலும் இருந்த குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெளியே வர, .அந்த இடமே குதூகலமாய் மாறியது.
‘‘விச்சு.. இது தான் கரைக்ட்..’’ என்று பார்வதி சொல்ல
‘‘இல்ல.. இது தான் சரி..’’ என்று விச்சும் சொன்னார்.
மகள், மருமகன் என்று குடும்பமே அந்த விளையாட்டில் குதூகலிக்க வீட்டினுள்ளேயே அடைந்து கிடந்த லிங்கம் மெல்ல வெளியே வந்து, அவரும் அந்த விளையாட்டில் இணைந்து கொண்டார். அது வரையில் மெளனம் மண்டிக் கிடந்த வீட்டில் சந்தோசம் தலைமுட்டி நின்றது. அது வரையில் அவரவர் அறையில் கிடந்தவர்கள் இப்போது ஒன்றாகக் குழுமி உட்கார்ந்து கொண்டு அந்த வித்யாச விளையாட்டை விளையாடும் போது எல்லோரும் குழந்தையாகவே மாறிப்போனார்கள்.
‘‘இதத்தானே.. நான் கேட்டேன் இப்பப் பாருங்க.. எவ்வளவு சந்தோசமா.. இருக்கோம். இது போல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் செலவு செய்யுங்க. அப்படி செஞ்சிங்கன்னா..! நம்ம உடலும் மனசும் ரொம்பவே உற்சாகம் அடையும்..’’ என்று சொல்லியபடியே வீட்டிற்குள் நுழைந்தார் லிங்கத்தின் தம்பி ஈஸ்வரன். -அவரும் அந்த விளையாட்டில் இணைந்து கொள்ள குடும்பமே குழந்தையானார்கள்.
விரிந்து பரந்து ஒற்றுமையில் ஓங்கி
அன்பில் விழுதுவிட்டு வளர்கிறது அந்த உறவு ஆல மரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *