செய்திகள்

‘‘வாய் கிழிய பேசுகிறாரே மோடி – ஜனநாயகத்தின் படி நடக்கிறாரா?’’ மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

‘எங்கு போனாலும் மக்களைத் தூண்டிவிடும் நோக்கத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறார்’

மும்பை, மே 18–

பிரதமர் மோடி ஜனநாயகம் பற்றி வாய் கிழியப் பேசுகிறார், ஆனால் அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி கூட்டணியின் தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

“மகா விகாஸ் அகாதி வலிமையாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் குறைந்தபட்சம் 46 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.பா.ஜ.க. எங்களை தேசத் துரோகிகளாகவும் தங்களை தேசபக்தர்களாகவும் சித்தரிக்க முயல்கிறார்கள். வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படையில் மகாராஷ்டிரா அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடியே ஆதரிக்கிறார்.

மோடி எங்கு சென்றாலும் மக்களைத் தூண்டிவிடும் நோக்கிலேயே செயல்படுகிறார். எனது அரசியல் வாழ்க்கையில் இவரைப் போன்ற ஒரு பிரதமரை இதுவரை நான் பார்த்ததில்லை.

பாஜக அரசால் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டு உடைக்கப்படுகின்றன. உண்மையான கட்சிகளின் சின்னங்கள் பறிக்கப்பட்டு, பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

மோடி ஜனநாயகத்தைப் பற்றி பேச மட்டுமே செய்கிறார். ஒருபோதும் ஜனநாயகத்தின்படி அவர் செயல்படுவதில்லை. மோடியின் ‘கட்சி உடைப்பு’ கொள்கைக்கு மகாராஷ்டிரா மட்டுமே உதாரணம் அல்ல. மகாராஷ்டிராவுக்கு முன்பே கர்நாடகா, மணிப்பூர், கோவா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடியின் ‘கட்சி உடைப்பு’ கொள்கையின் தாக்குதல் இருந்தது. அவருடைய இந்தக் கொள்கைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுகிறோம்.

மம்தா பேட்டி

டெல்லியில் 3 தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுகிறது. இது ஜனநாயகம். எதேச்சதிகாரம் அல்ல, பா.ஜ.க.வை தோற்கடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரிப்போம் என மம்தா கூறியுள்ளார்.

சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்துவிடுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை நாங்கள் புல்டோசர் பயன்படுத்தவில்லை. தூண்டுதல் செய்பவர்கள் மீது, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குறுதிகள் நிறைவேறும்

80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் அரிசி வழங்குவதாக பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியா கூட்டணி அரசு ஒவ்வொரு மாதமும் 10 கிலோ தானியங்களை மக்களுக்கு வழங்கும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். அரசியலமைப்பை காப்பாற்றவும் நல்லாட்சியை கொண்டு வரவும் இந்த தேர்தலில் நாம் அனைவரும் வெற்றிபெற வேண்டும். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றைப் பயன்படுத்தி மிரட்டும் மோடியின் செயல் தொடராது”.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *