செய்திகள்

நரேந்திர மோடியின் தோல்வி பயத்தால் தொடரும் அநாகரீக தேர்தல் பிரச்சாரம்

செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை, மே 28–

தேர்தல் தோல்வி பயத்தால், தேர்தல் பரப்புரையில் அநாகரீகமாக பேசி வந்த நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினர் ஆபாச நடனம் ஆடி மகிழ்ந்து கொள்ளலாம் என்று தரம் தாழ்ந்து பேசி இருப்பது கண்டனத்துக்குரியது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மக்களவை தேர்தல் பரப்புரையின் தொடக்கத்திலேயே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை திரித்துக் கூறி, முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கையைப் போல இருப்பதாக கூறி, அபத்தமான வாதங்களை நாள்தோறும் பிரதமர் மோடி பேசி வந்தார். மேலும் காங்கிரசின் மறுப்பையும் பொருட்படுத்தாமல், மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிற பரப்புரையை பாசிச போக்கு கொண்ட நரேந்திர மோடி நிறுத்திக் கொள்ளவில்லை.

முட்டாள்தனமான பேச்சு

முதல்கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் தொடங்கிய மோடி எதிர்ப்பு அலை, 6 கட்டங்களாக இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் எதிரொலிக்க தொடங்கியதால் தேர்தல் கள நிலவரத்தை உளவுத்துறை மூலம் அறிந்த பிரதமர் மோடியின் பேச்சில் பதற்றமும், அச்சமும் தொடர்ந்து வெளிப்பட ஆரம்பித்தன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள் என்று கூறுவதைவிட முட்டாள்தனமான பேச்சு வேறு எதுவும் இருக்க முடியாது.

அதோடு நிற்காமல் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்றும், தற்போது எஸ்.சி., எஸ்.டி., ஒ.பி.சி. மக்களுக்கு வழங்கப்படுகிற இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்கி விடுவார்கள் என்று கடைந்தெடுத்த ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை சமீபகாலமாக தொடர்ந்து பிரதமர் மோடி நவீன கோயபல்ஸ் போல பேசினார்.

இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை என்று பல நீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்திருக்கின்றன. இடஒதுக்கீடு என்பது மதங்களை பொருட்படுத்தாமல் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டில் எப்படி பங்கு இருக்கிறதோ, அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கிய மதத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பங்கு இருக்கிறது.

மோடிக்கு எதிர்ப்பு அலை

உண்மை நிலை இப்படியிருக்க சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சை பரப்புரையில் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று மோடி பகல் கனவு காண்கிறார். ஆனால், 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத காரணத்தால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கம், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நியாய விலை மறுப்பு, மாநில உரிமைகள் பறிப்பு என மக்கள் விரோத ஆட்சி நடத்தியதால் மக்களிடையே பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக அலை வீசிக் கொண்டிருக்கிறது.

மோடி தனது பரப்புரையில் எதிர்கட்சியினரை மிகமிக இழிவாக தரக்குறைவான முறையில் பிரதமர் பதவியை வகிக்கிறோம் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் பேசி வருகிறார். முகலாய அரசவையில் நடத்தப்படுகிற முஜ்ரா நடனத்தை எதிர்கட்சியினர் நடத்தி மகிழ்ந்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். ஒரு பிரதமர் ஆபாச நடனத்தை மேற்கோள் காட்டி எதிர்கட்சியினரை தேவையில்லாமல் இழிவுபடுத்துவது நரேந்திர மோடியின் அரசியல் அநாகரீகத்தையே காட்டுகிறது.

இந்தியா கூட்டணி ஆட்சி

தேர்தல் பரப்புரையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் நரேந்திர மோடி தன்னை கடவுளின் அவதாரம் என்றும், ‘தாய் தன்னை பெற்றெடுக்கவில்லை என்று கூறும் ஒருவர், உயிரியல் வழிமுறைப்படி தான் பிறக்கவில்லை என்று கூறும் ஒருவர், இந்திய நாட்டின் பிரதமராக இருப்பதற்கு மனரீதியாக தகுதியுடைவர் தானா?” என்கிற கேள்வி நாட்டு மக்களிடையே எழுந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக, மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024 இல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்த மோடியின் ஆட்சியை அகற்றி பாடம் புகட்டுவதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தியா கூட்டணி ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி. இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் கூறி உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *