செய்திகள்

தேர்தலில் தோற்றபோதும் அமைச்சரான முருகன்

37 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

புதுடெல்லி, ஜூன் 10–

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில், முந்தைய அமைச்சர்கள் 37 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஸ்மிருதி இராணி, அனுராக் தாக்கூர், அர்ஜுன் முண்டா, பர்சோத்தம் ரூபாலா, ஆர்.கே.சிங், மகேந்திர நாத் பாண்டே, அஸ்வின் செளபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பல்யான், ராஜீவ் சந்திரசேகர் உள்பட 37 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இவர்களில் 18 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்கள்.

தேர்தலில் தோல்வியுற்றபோதும், மத்திய அமைச்சராக மீண்டும் நியமனம் பெற்ற ஒரே நபர் எல்.முருகன் ஆவார். இவர், ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

7 பெண் அமைச்சர்கள்

புதிய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா தேவி, ஷோபா கரந்தலஜே, ரக்ஷா கட்ஸே, சாவித்ரி தாக்கூர், நிமுபென் பம்பானியா, அனுப்ரியா படேல் ஆகிய 7 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முந்தைய அமைச்சரவையில் 10 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர்.முன்பு அமைச்சர்களாக இருந்த ஸ்மிருதி இரானி, பாரதி பிரவீண் பவார், சாத்வி நிரஞ்சன் ஜோதி, தர்ஷணா ஜார்டோஷ், மீனாட்சி லேகி, பிரதிமா பெளமிக் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

புதிய அமைச்சரவையில் முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், எச்.டி.குமாரசாமி உள்பட 33 பேர் புதுமுகங்கள் ஆவர்.

மத்திய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 81. தற்போது பிரதமருடன் சேர்த்து 72 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். எனவே, இன்னும் 9 அமைச்சர்கள் வரை பதவி ஏற்கலாம்.

கூட்டணி கட்சியில் 11 பேர்

புதிய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த டாக்டர் சந்திரசேகர் பெம்மசானி மற்றும் ராம் மோகன் நாயுடு ஆகிய 2 பேர் இடம்பெற்றுள்ளனர். இக்கட்சிக்கு மொத்தம் 16 எம்.பி.க்கள் உள்ளனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ராம்நாத் தாக்குர் மற்றும் லலன்சிங் ஆகிய 2 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இக்கட்சிக்கு மொத்தம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதுபோல, சிவசேனா (ஷிண்டே) கட்சிக்கு 7 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் இக்கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் மட்டும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 5 எம்.பி.க்கள் உள்ள நிலையில் சிராக் பஸ்வானுக்கு மட்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எச்.டி.குமாரசாமி, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்.பி.க்கள் உள்ள நிலையில் ஒருவருக்கு மட்டும்அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு எம்.பி.யை கொண்ட இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மாஞ்சி, அப்னாதளம் கட்சியின் அனுப்ரியா படேல் உட்பட மொத்தம் 11 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *