செய்திகள் நாடும் நடப்பும்

ஜவுளி ஏற்றுமதியில் சாதிக்கும் தமிழகம்


ஆர். முத்துக்குமார்


தமிழ்நாட்டின் ஜவுளி தொழில்துறை இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான ஜவுளி உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். பருத்தி, பட்டு, செயற்கை நார் போன்ற பல்வேறு வகையான ஜவுளிப் பொருட்களை உற்பத்தி செய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்குகிறது.

இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 20.78 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமைக்குரிய செய்தி. 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதி 34.43 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது, அதில் தமிழ்நாடு 7.15 பில்லியன் டாலர் அளவில் பங்களிப்பு வழங்கியுள்ளது. குஜராத்தும் மகாராஷ்டிராவும் முறையே 15.36 சதவீதம் மற்றும் 11.54 சதவீதத்துடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

இது தமிழ்நாட்டின் ஜவுளி தொழில்துறையின் மாபெரும் பங்களிப்பை காட்டுகிறது. இருப்பினும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு போன்ற காரணங்கள் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த நிதியாண்டின் மொத்த ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்துள்ளது என்றாலும் புதிய இயந்திரங்களில் உற்பத்தி 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்பது கவலைக்குரிய விஷயம்.

ஜவுளி தொழில்துறையின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஜவுளி தொழில்துறை தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. ஜவுளி ஏற்றுமதி தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகிறது.

இருப்பினும் தமிழ்நாட்டின் ஜவுளி தொழில்துறை சில சவால்களையும் எதிர்கொள்கிறது. ஜவுளி தொழிலில் இருந்து ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகளின் கழிவுகளை சரியான முறையில் நிர்வகித்து, பசுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், தொழில்துறையின் நீடித்த வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் நட்பு முயற்சிகளை மேம்படுத்தி, தொழில்துறையில் பசுமை தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சு, விஸ்கோஸ், பாலியஸ்டர், கழிவுப் பஞ்சு போன்ற மூலப்பொருட்கள் சர்வதேச விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மிக முக்கியம். மேலும் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வழங்கப்படும் மின் கட்டண சலுகையை தமிழக ஜவுளி தொழில்துறைக்கும் வழங்க வேண்டும்.

இவை அனைத்திற்காக தமிழ்நாடு அரசு தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தி, அனைத்து பிரிவுகளுக்கும் ஏற்றதாக புதிய ஜவுளிக் கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் சாதிக்கும் .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *