செய்திகள்

குழந்தை கடத்தல்: போலி காணொலி பரப்பினால் நடவடிக்கை

போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை, பிப். 17–

‘‘குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான காணொலிகளை பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சென்னை நகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதனை சென்னை பெருநகர காவல்துறை உறுதிபட தெரிவித்து கொள்கிறது.

இது போன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’.

இவ்வாறு அதில் கமிஷனர் எச்சரித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *