செய்திகள்

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய அச்சுறுத்தலை அடியோடு ஒழிப்பது அவசியம்: அமைச்சர் முத்துசாமி

அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல்

சென்னை, ஜூன் 29–

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான மது விலக்கு திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் முத்துசாமி இன்று தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அருந்துவது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.

இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

விலைமதிப்பற்ற உயிர்களை இழப்பதால்…

தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே தான் கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனையை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.

இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனைக் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையின் அளவை கணிசமாக அதிகரித்தும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்கவும் கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

அசையும் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல்

இதேபோல குற்றங்களை செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதில் இருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவினை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரை முறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்ய இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *