செய்திகள்

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை, ஜூன் 20–

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே விஷ சாராய இறப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 நபர்கள் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாகத் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேற்படி நபர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் பிரவீன்குமார், சுரேஷ், சேகர், வடிவு மற்றும் கந்தன் உள்ளிட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்பின் காரணம், உடல் கூராய்விற்குப் பின்பு தெரியவரும்.

மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த மருத்துவக் குழு, பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலிருந்தும், சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 18 நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 அவசர கால ஊர்திகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

பாக்கெட் சாராயம்

மேலும் பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200 லிட்டர் விஷச்சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்தவுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் மாற்றம்

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, ரஜத் சதுர்வேதி கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சி.பி.சி.ஐ.டி.–க்கு மாற்றம்

அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு முதல்வர்

வேண்டுகோள்

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கவர்னர் ஆர்.என்.ரவி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் “எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:– கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளி வருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *