செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் விசாரணையை துவக்கினார்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21–

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ் கள்ளக்குறிச்சியில் தனது விசாரணையை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29 ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முற்பகலில் இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 36 என ஆனது. நேற்று மாலை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பலர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் விஷசாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 28 பேர், புதுச்சேரி ஜிப்மரில் 3 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 17 பேர், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் உட்பட 52 பேர் உயிரிழந்தனர்.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. அதில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விசாரணையை துவக்கிய

கோகுலதாஸ்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுலதாஸ், இச்சம்பவத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் இன்று கேட்டறிந்தார் அதையடுத்து கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட தமிழக அரசு, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான சிறப்பு விசாரணை குழு நேற்று விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை தொடர்ந்து கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா மற்றும் தாமோதரன் மற்றும் சின்னதுரை ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி புதுச்சேரியை தேர்ந்த ஜோசப் என்கிற ராஜாவையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்த சிபிசிஐடி, இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மாதேஷ் என்பவரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *