சிறுகதை

ஓரே வழி – மு.வெ.சம்பத்

பிரேம் தனது கல்லூரிப் படிப்பை முடித்ததும் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தான்.

தனது சொந்த ஊரிலிருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி செய்ய நியமித்தனர்.

ஒரு மாவட்டத்தின் தலைநகராகிய அந்த ஊரில் கிட்டத்தட்ட எல்லா வசதிகளும் இருந்தன.

பணி நிரந்தரமாகும் வரை பிரேம் அடிக்கடி விடுமுறை ஏதும் எடுக்காமல் அந்த ஊர் மக்களுடன் இணைந்தான். முக்கியமான பணிகளுக்கு மட்டும் சொந்தஊர் வந்து சென்றான்.

ஊர்த் திருவிழாவிற்குக் கூட பிரேம் வரவில்லை. ஊரில் அவன் நண்பர்கள் அவன் வேலை செய்யும் ஊருக்குச் சென்று அவனுடன் பொழுதைப் போக்குவார்கள். அவனுக்கு நாளுக்கு நாள் வேலையில் உள்ள நெளிவு சுளிவெல்லாம் தெரியவே மனதிற்குள் இந்த வேலை சற்று பாதுகாப்புடன் செய்ய வேண்டிய ஒன்று. கரணம் தப்பினால் மரணம் என்று சொல்லிக் கொண்டான். சில இடங்களில் கண் இருந்தும் குருடனாய், காது இருந்தும் செவிடராய் நடக்க வேண்டியதாயிற்று பிரேமிற்கு.

எந்த வேலையையும் குறைவாக எடை போடக்கூடாதென நினைத்தான்.

இரண்டு நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்த பிரேமிடம் அவனது அம்மா பக்கத்து தெருவில் இருக்கும் அவரது தோழியின் மகள் விமலா பற்றி அவளது அம்மா கூறியதைச் சொன்னாள்.

பிரேம் பொது வேலையென்றாலே கஷ்டப்படாமல் எப்படி நடக்கும் என்றான். எப்படியம்மா பொதுவில் வேலை செய்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியும். முதலாளி சொல்வது தான் சட்டம் என்றான்.

அவனது அம்மா அதெல்லாம் சரி தான். அந்தப் பெண் நீ படித்த கல்லூரியில் தான் படித்தாள். ஒரு தடவை நீ கூட அவளுக்கு உதவி செய்தியாமே என்றார்.

பிரேம் பழைய செய்திகள் வேண்டாம். நான் சற்று ஓய்வெடுக்கிறேன் என்று கூறி நகர்ந்தான்.

மாலையில் நண்பர்களை பார்க்கச் சென்ற பிரேம் அவர்களுடன் சற்று பொழுதைப் போக்கி விட்டு திரும்பும் வேளையில் நண்பர்களில் ஒருவன், தான் அடுத்த வாரம் நீ பணி செய்யும் ஊருக்கு வருவதாக் கூறினான். பிரேம் வா மகிழ்ச்சி தான் என்றான். பிறகு எப்போதும் தேநீர் சாப்பிடும் கடையில் தேநீர் அருந்திவிட்டு கலைந்தார்கள். வீட்டிற்கு வந்த பிரேம் அவனது அம்மாவிடம் நான் நாளைக் காலையில் சீக்கிரம் கிளம்பி விடுவேன். ஏதாவது தேவை என்றால் உடனே கூறு என்றான்.

ஒண்ணுமில்லையப்பா என்ற அம்மாவிடம் ஒரு வாரம் நீ ஊருக்கு வாயேன் என்றதும் அவனது அம்மா சரி பார்ப்போம் என்றதும் மிகவும் ஆனந்தமடைந்தான்.

நண்பர்கள் மற்றும் அம்மா அடுத்துடுத்து வர பிரேமிற்கு தினசரி நாட் காட்டியில் தேதி கிழிப்பது போன்று பொழுது நகர்ந்தது. பிரேமின் ஏற்பாடுகள் வந்து தங்கியவர்களை திக்கு முக்காடச் செய்தது.

அடுத்தடுத்து நாங்கள் வருகிறோம் என்று கூறி விடை பெற்றனர் நண்பர்கள். அம்மாவிற்கு மகன் வீட்டைப் பராமரிப்பது பொறுப்பாக வேலைகள் செய்வது ஆச்சரியம் அளித்ததோடு மட்டுமல்லாமல் அவரது மனத்தில் சீக்கிரம் மருமகள் வரும் நேரம் வந்ததென நினைத்தார்.

எல்லோரும் ஊருக்குத் திரும்பி விட பிரேமிற்கு தனிமை வாட்டி வதைத்தது என்றால் மிகையாகாது. அலுவலகத்தில் அடுத்தடுத்து வந்த பணிகளால் தன்னையே மறந்து நிற்கும் நிலைமை பிரேமிற்கு. ஊர் மற்றும் நண்பர்களை மறந்தான் வேலைச் சுமையில் பிரேம். அலுவலகத்தில் பிரேம் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை நேரம் காலம் பாராது பணி செய்தாலும் வேலை முடிவுக்கு வருவது சற்று சிரமமாகவே இருந்தது. வர வர அலுவலகத்திலிருந்து கிளம்பவே பிரேமிற்கு இரவு ஒன்பது மணியாகி விடுகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்த பிரேம் முதலில் அம்மாவிடம் அமர்ந்து நிறையவே பேசினான். அம்மா அவனுக்கு பிடித்த சிற்றுண்டி தந்து விட்டு பேச்சோடு பேச்சாய் ஒரு சங்கதி சொன்னார்.

பிரேம் நன்கு கேட்டு விட்டு நமக்கு எதற்கம்மா அடுத்தவர் பிரச்னை என்றான்.

அம்மா மேலும் அந்த சங்கதி பற்றி சற்று அழுத்தமாகவே கூறி நல்ல விதமாக யோசித்து முடிவு எடு என்றார்.

பிரேம் தன் நண்பர்களிடம் அம்மா சொன்தைக் கூற அதில் ஒரு நண்பன் சிவா நான் சொல்வதைக் கேளுங்கள். காரியம் நமது பக்கம் வெற்றியாகும் என்றான்.

எனக்கு நீங்கள் கூறும் சங்கதி பற்றி தகவல் சேகரிக்க ஆட்கள் உண்டு என்றான்.

பிரேம் சரி நல்ல விதமாக முடிந்தால் அம்மா மகிழ்வடைவார்கள் என்றான்.

மறு நாள் காலையில் நண்பர்களுடன் சென்ற பிரேம் மாலையில் திரும்பி வந்து அம்மாவிடம் எல்லா நல்ல படியாக முடிந்தது என்றான்.

அம்மா மகிழ்வுடன் எப்படி என்ற கேட்டார்.

பிரேம் நடந்ததைக் கூறத் தொடங்கினான்.

சிவா, கணேஷ், ஆனந்தன் மற்றும் நான் பக்கத்து ஊருக்குச் சென்று விசாரணை செய்தோம். சிவாவின் நண்பன் அந்த அறக் கட்டளை அலுவலகத்தை காட்டியதோடு அதன் நிறுவனரையும் அறிமுகப் படுத்தினான்.

அந்த அலுவலகத்தில் ஒரே பெயரில் இருவர் உள்ளனர். ஒருவர் அவரது சொந்தம். நாங்கள் நிறுவனரிடம் நீ சொன்ன பிரச்னையைக் கூற அவர் என்னை நீங்கள் யாரெனக் கேட்டனர்.

நான் எனது அடையாள அட்டையைக் காட்டியதும், சொல்லுகிறேன் என்று பல விவரங்களை முன் வைத்தார். அன்று ஒரு நன்கொடையாளர் ரூபாய் முப்பதாயிரம் நன்கொடை தந்து ரசீதைப் பெற்றுச் சென்றார்.

வழக்கமாக பணம் வாங்கும் உங்கள் ஊர் விமலா பணத்தை பெற்றுக் கொண்டு அதை வங்கியில் உடனே செலுத்த பணம் கட்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விட்டு சாப்பிட்டு விட்டு வந்து வங்கியில் கட்டி விடலாமென நினைத்துச் சென்றாள்.

சாப்பிட்டு விட்டு வந்த விமலா மேசை மேல் இருந்த வங்கிப் பணம் கட்டும் விண்ணப்பப் புத்தகத்தைப் பார்த்ததில் அதில் ரூபாய் பதினைந்தாயிரம் என எழுதி வங்கியில் பணம் கட்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியானாள்.

விமலா உடனே என்னைத் தொடர்பு கொண்டு நடந்தைக் கூறினார்..

நான் நீங்கள் தான் முழுப் பொறுப்பு பணத்துக்கு என்று கூறினேன்.

மேற்கொண்டு விமலா சொன்னதை எதையும் கேட்காமல் சென்றேன்.

விமலா அழுது கொண்டே சென்றாள். அன்றிரவு எனக்கு தூக்கமின்றி தவித்தேன்.

மனது விமலா செய்திருக்க மாட்டாள் என்று சொல்லியது. உடனே அலுவலகம் வந்து மறைகாணி(சி.சி.டிவி)யில் நடந்ததைப் பார்த்தேன். சற்று அதிர்ந்த நான் உடனே எனது மனைவியை அழைத்துக் காட்டினேன். ஏனெனில் இன்னொரு விமலா இவர்களது உறவினர் வங்கி பணம் செலுத்தும் விண்ணப்பத்தில் ரூபாய் பதினைந்தாயிரத்திற்கு பூர்த்தி செய்து விரைந்து வங்கிக்கு சென்று பணம் கட்டி விட்டு அந்த புத்தகத்தை மேசையின் மேல் வைத்து விட்டு சென்று விட்டதைக் கண்டார்கள். அவள் செய்த செய்கையினால் விக்கித்து போனார்கள். மறுநாள் விமலா வந்தால் பேசிக் கொள்ளலாம் என இருந்தேன். அடுத்தடுத்த நாட்களில் விமலா வரவில்லை. திடீரென ஒரு நான் காலை அவளது அம்மா வந்து

‘‘இந்தாருங்கள் உங்களது பதினைந்தாயிரம் ரூபாய் என்று மேசையில் வைத்தார்கள்.

நான் அவரை அமரச் செய்து ஏது இந்தப் பணம் என்று கேட்க, அவளது நகையை விற்று கொண்டு வந்தேன். என் பெண் பணம் எடுத்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது என்றார்.

எனக்கு பேசவே வார்த்தை வராமல் தவறு நடந்து விட்டது. உங்கள் பெண் எடுக்கவில்லை. தயவு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாளையிலிருந்து விமலாவை வேலைக்கு அனுப்புங்கள் என்றாராம் நிறுவனர்.

அதற்கு பதிலேதும் கூறாமல் விமலா அம்மா சென்றதாகக் கூறினார் என்று சொன்னான் பிரேம்.

உடனே அவன் அம்மா அவள் நல்ல பெண் என்று கூறினாள்., ஒரே வழி இனிமேல் அவள் வேலை பார்க்க வேண்டாம். உனக்கு மருமகளாக வரட்டும் என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே வந்த விமலாவின் அம்மா இது நான் நேர்மைக்குக் கிடைத்த பரிசு என்றார். வாழ்த்துக்கள் என ஒட்டு மொத்தமாக கூறிய நண்பர்களைப் பார்த்து பிரேம் எழுது சித்திரம் போல் நின்றான்.
#சிறுகதை

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *