செய்திகள்

உத்தரப் பிரதேசத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தி யாத்திரை

உடல்நலக்குறைவால் பிரியங்கா பங்கேற்கவில்லை

வாரணாசி, பிப். 17–பிரியங்கா இல்லாமல் உத்தரப் பிரதேசத்துக்குள் ராகுல் காந்தி யாத்திரை நுழைந்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நீதிக்கான ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை உத்தரப் பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. பிகாரிலிருந்து நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தை வந்தடைந்தார் ராகுல்.

எனினும் அவரை வரவேற்க உத்தரப் பிரதேச காங்கிரசின் முக்கிய தலைவராக இருக்கும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வரவில்லை. உடல்நலம் சரியில்லாத காரணத்தால் பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் வரவில்லை. இதுதொடர்பாக பிரியங்கா தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், “உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் முதல் இடமாக கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள சையத்ராஜா என்ற இடத்தில் பேசிய ராகுல், “இந்த யாத்திரை அநீதி, சமூக அநீதிக்கு எதிராக மேற்கொள்ளப்படுகிறது. எங்கள் போராட்டம் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிரானது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நீங்கள் அனைவரும் டிவியில் பார்த்தீர்கள். இந்த கும்பாபிஷேக விழாவில் ஏழைகள் யாரேனும் பார்த்தீர்களா?. அல்லது எந்த தொழிலாளியையாவது பார்த்தீர்களா, விவசாயிகளையாவது பார்த்தீர்களா?. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் இந்தியாவின் பல பணக்காரர்கள் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் ஏழைகளோ, விவசாயிகளோ, தொழிலாளர்களோ அங்கு காணப்படவில்லை. இது அநீதி. ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு அநீதி இழைக்கப்படுவதால் வெறுப்பு அதிகரித்து வருகிறது.

இந்த யாத்திரையில் நாங்கள் நீண்ட உரைகளை பேசுவதில்லை. நாங்கள் மக்களைச் சந்திக்கிறோம், அவர்களுடன் பழகுகிறோம். இதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வோம். விவசாயிகள் மற்றும் ஏழைகளின் பிரச்சனைகளை ஊடகங்கள் காட்டவில்லை என்றார்.

முன்னதாக நேற்றிரவு சந்தௌலி தங்கியிருந்த ராகுல் காந்தி, இன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடு செய்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *