செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 33-வது உலக எய்ட்ஸ் தின விழா

திருவள்ளூர் மாவட்டத்தில் 33-வது உலக எய்ட்ஸ் தின விழா:

மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி துவக்கி வைத்தார்

திருவள்ளூர், டிச. 2–

திருவள்ளுர் ஜே.என். சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக, 33-வது உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆணைக்கிணங்க, பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். 10-ம் மற்றும் 12-வகுப்பில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். மேலும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில், கையெழுத்திட்டு துவக்கி வைத்து சமபந்தி விருந்தில் அனைவருடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி கூறியதாவது :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் 33 நம்பிக்கை மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை இலவசமாக செய்யப்பபடுகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இலக்கு மக்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதன் மூலம் எச்.ஐ.வி தடுப்பு பணியை நாம் சிறப்பாக செயல்படுத்தலாம்.

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை அரசு நலத்திட்டமான உழவர் பாதுகாப்பு அட்டை மூலம் 315 பெரியவர்கள் மற்றும் 7 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 66 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு அட்டை (அ) பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா அட்டை பெற்று தரப்பட்டது. இலவச தையல் இயந்திரம் வழங்குதல், கல்வி கட்டணம் செலுத்துதல், பசுமை வீடு வழங்குதல் மற்றும் மாதாந்தோறும் ஏ.ஆர்.டி வந்து செல்ல இலவச பேருந்து பாஸ் வழங்குதல் போன்ற பல்வேறு அரசு நல திட்டங்களும் முறையாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் அரசு மருத்துவமனை (ம) மருத்துவகல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சவ், இணை இயக்குநர் (குடும்பநலம் (ம) ஊரகநலப்பணிகள்) ராணி, துணை இயக்குநர் (குடும்பநலம்) இளங்கோவன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜவஹர்லால், மாவட்ட திட்ட மேலாளர் (பொ) கே.எஸ்.கௌரி சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *