கணவன் மரணத்தால் வீட்டைவிட்டு ஓடி வந்து மனநலக் காப்பகத்தில் அடைக்கலமான பெண்:
மேடையில் பாடிய பாட்டால் குடும்பத்தில் இணைந்தார்
உரக்கவே பேச வைக்கும் ‘மவுனராகம்’ முரளியின் அனுபவம்
பிரிந்த குடும்பம், இசையால் , பாடும் பாட்டால் (இந்தியில் யாதோங்கீ பாரத், தமிழில் எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ படம் நினைவுக்கு வருமே…!) ஒன்று சேர்வதாக நிழலில் – சினிமாவில் காட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறோம். நிஜத்தில் ஒரு பெண்ணின் நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு சம்பவம் நடத்திருக்கிறதே. நெகிழ வைக்கும் நிகழ்வு இது. அந்தப் பெண்ணின் பெயர்: கவிதா. வயது 38.
கணவரின் மரணத்தால் மனநலம் பெரிதாக பாதிக்கப்பட்ட சங்கீதா, வீட்டைவிட்டு வந்துவிட்டார். எங்கு போவது, எப்படி போவது என்று எதுவும் தெரியாமல் ரோட்டில் திரிந்து கொண்டிருந்தவரை ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் (சென்னை பெருநகரில் இயங்கி வரும் அமைப்பு) நிர்வாகி ஒருவர் பார்த்துவிட்டு, அவரை தாங்கள் நடத்தும் ஆதரவற்றோர் மற்றும் மனநலக் காப்பகத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.
கணவன் ஞாபகம், வீட்டு ஞாபகம் வந்து வந்து போனதால் ஆத்திரமும் – ஆவேசமும் அடைந்தவர், தனது சுயக்கட்டுப்பாட்டை இழந்தார். அடுத்தவர்களைத் திட்டுவது, சண்டைக்கு இழுப்பது, அடிதடியில் இறங்குவது என்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் நிர்வாகிகள், அவருக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து – மாத்திரை கொடுத்து, தினமும் 3 வேளை உணவுடன் நல்ல விதமாக பார்த்து பராமரித்து வர ஆரம்பித்தார்கள்.
கொஞ்சங்கொஞ்சமாக கவிதாவின் போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. காப்பக அறையில் இருக்கும்போது தனக்குத் தெரிந்த சினிமாப் பாடல்களை சத்தம் போட்டு பாட ஆரம்பித்தார். அவரின் குரலும் இனிமையாக இருந்த நிலையில் காப்பகத்தில் இருந்த மற்றவர்கள் அந்தப் பாடலைக் கேட்டு, ரசித்துக் கைத்தட்ட ஆரம்பித்தனர். இதில் கவிதாவின் கவனமும் – ஆர்வமும் முழுக்க முழுக்கத் திரை இசைப் பாட்டில் திரும்பியது. அவரது மனநிலையிலும் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் காப்பகத்தில் மாலை நேரத்தில் கவிதாவை நிர்வாகிகள், பாட வைத்தார்கள். இதில் அவரது குரல் இன்னும் பக்குவப்பட்டது. இந்நிலையில் பொது நிகழ்ச்சியில், விசேஷ வேண்டுகோளின் பேரில் கவிதாவைப் பாட வைத்தால் என்ன? என்று காப்பக ஒருங்கிணைப்பாளர் நந்தினிக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்நேரம், பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் ஸ்பெஷல் திரை இசை நிகழ்ச்சியை ‘மவுனராகம்’ முரளியோடு இணைந்து நடத்துவது தெரிய வந்தது.
இந்நிலையில் நந்தினி, சரணையும், முரளியையும் அணுகினார். கவிதாவின் பின்னணியை எடுத்துச் சொல்லி, பாட ஒரு சந்தர்ப்பம் தருமாறு கேட்டுக் கொண்டார். திறமைசாலிகள், மாற்றுத்திறனாளிகள், ஸ்பெஷல் சில்ரன் (மனவளர்ச்சிக் குன்றியவர்கள்) என்ற நிலையில் இருப்பவர்களை மேடையேற்றுவதில் விசேஷ ஆர்வம் – அக்கறையோடு இருக்கும் முரளி, கவிதாவை மேடையேற்றினார்.
‘புன்னகை மன்னன்’ பாடல்
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘புன்னகை மன்னன்’ (கமல் – ரேவதி, ரேகா நடித்தது) படத்தில் இடம்பெறும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்… பாடலை கவிதா மேடையில் பாடினார். அரங்கில் அப்படியொரு அமைதி. பார்வையாளர்கள் ரசித்துக் கேட்டனர். கைதட்டி பாராட்டி ஊக்குவித்தனர். இதில் நெகிழ்ந்து போனார் கவிதா. (தன் பிரச்சனை பற்றியும் நினைக்கவில்லை. மேடைக்கு வருவதற்கு முன் ஒத்திகை கூட பார்க்கவில்லை).

மவுனராகம் முரளியின் மேடையில் கவிதா பாடிய நிகழ்ச்சி, சமூகவலைதளத்தில் (பேஸ்புக்) வெளியானது. அதைப் பார்த்த ஒரு சிலர், மவுனராகம் முரளியை தொடர்பு கொண்டு கவிதாவின் குடும்பம் பற்றிய விவரத்தை சொன்னார்கள். முரளி, காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவர்கள் புதுச்சேரியில் உள்ள கவிதாவின் குடும்பத்தை சந்தித்து அவர்களிடம் கவிதாவை ஒப்படைத்தனர்.
இசை மூலம் தன் வீட்டுப் பெண் தங்களோடு இணைந்ததில் கவிதா குடும்பத்தினருக்கு, மட்டற்ற மகிழ்ச்சி. இசையால் உறவை இணைத்ததில் எஸ்.பி.பி.சரண் – மவுனராகம் முரளி நிர்வாகி காமராஜ், சமூக தொண்டு நிறுவனம், அறக்கட்டளை நிர்வாகி ஒருங்கிணைப்பாளர் நந்தினி ஆகியோருக்கு அப்படியொரு ஆனந்தம்.
இசை கேட்டால் புவி அசைந்தாடும்…
இது நிழலில் ஒலித்த பாட்டு.
இசை கேட்டதால் பிரிந்த உறவு விரைந்தோடி இணைந்தது என்பது நிதர்சன உண்மை என்று ஆனந்தத்தில் அனுபவம் பேசினார் முரளி. உரக்கவே பேச வைக்கும் ‘மவுனராகம்’ குழுவின் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு!
– வீ. ராம்ஜீ