செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 7,557 மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை

கடலூர், பிப். 25–

கடலூர் மாவட்டத்தில் 7,557 மாணவிகளுக்கு பெண் கல்வி ஊக்குவிப்பு தொகையை வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்தனர்.

இக்கூட்டத்தில் மொத்தம் 392 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என வருவாய் அலுவலர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 15 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவிதொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 நபர்களுக்கு தலா ரூ.3,573 மதிப்பில் என மொத்தம் ரூ.28,584 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

மேலும் கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 12 வட்டார கல்வி அலுவலகங்களை உள்ளடக்கிய 858 பள்ளிகளில் பயிலும் 3–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை பயில்வோர்களுக்கு ரூ.500 வீதம் 6,129 மாணவிகளுக்கு ரூ.30.65 லட்சமும், 6–ம் வகுப்பு பயிலும் 1,318 மாணவிகளுக்கு ரூ.13.18 லட்சமும் என ஆகமொத்தம் 7,557 மாணவிகளுக்கு ரூ.43.93 லட்சம் மதிப்பீட்டில் ஊக்குவிப்பு தொகையினை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் வீ.வெற்றிவேல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஸ்வரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) கற்பகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமுருக தட்சணாமூர்த்தி ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *