செய்திகள்

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இளம் பெண் மரணம்

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 2

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை கிடைத்த மகிழ்ச்சியில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த 23 வயது இளம் பெண், ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் குருநாதன் (54). இவரது மகள் மனிஷாஸ்ரீ (23.) இவர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் கவுன்சிலிங் நடந்துள்ளது. இதில் கலந்துகொள்ள குருநாதன், அக்காவின் கணவர் அய்யனார் ஆகியோருடன் சென்னை சென்றுவிட்டு நேற்று மாலை சென்னை செங்கோட்டை சிறப்பு ரெயிலில் பயணம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

சிறப்பு ரெயில் இன்று அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கர்பட்டி அருகே வரும்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த மனிஷா ஸ்ரீ, காற்று வாங்க படிக்கட்டு அருகே வந்து நின்றதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார். மகள் விழுந்தது தெரியாமல் தந்தை, மாமா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

ரெயில் சங்கரன்கோவில் வந்தவுடன் இறங்குவதற்காக மனிஷா ஸ்ரீயைத் தேடியுள்ளனர். அவர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோப்பையைநாயக்கர் பட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *