செய்திகள்

8-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Spread the love

ஈரோடு,ஜன.29–

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஈரோடு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், நம்பியூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-–

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் ரூ.3 லட்சத்து 430 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிப்பது குறித்து தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. உயர்கல்வித்துறை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவத்தேர்வு முறை ரத்து குறித்து அரசு இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மூலம் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு 1 மணி நேரம் கூடுதல் சிறப்பு வகுப்பு அளிக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதே என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். ஈரோடு மாணவர்கள் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்பில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *