நாடும் நடப்பும்

மூன்று வேளாண் சட்டங்கள், அதற்கு ஏன் போராட்டம்?

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா நிறைவேறிய நாளில் பஞ்சாப் மாநில சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல் அமளியை ஏற்படுத்தி ராஜினமா செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அங்கமாக இருந்த கட்சியாகும்.

கடந்த இரு மாதங்களாக அந்த மூன்று சட்டங்களையும் வாபஸ் பெறச் சொல்லி விவசாயிகள் நாடெங்கும் ஆங்காங்கு போராட்டம் நடத்தி வருவதை ஊடகங்களில் பார்க்கிறோம்.

பிரதமர் மோடியும் அவரது கட்சி சகாக்களும், ‘இது எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம் என்றும் அச்சதி வலையில் சிக்கி விடாதீர்கள், போராட்டத்தை கைவிடுங்கள்’ என கூறிவருகிறார்கள்.

ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. மாறாக தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இப்புதிய மசோதாக்களின் சாதக பாதகங்கள் என்ன? முதலில் அந்த மூன்று மசோதாக்கள் என்ன என்பதை பார்ப்போம்.

1) அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டை தளர்த்தி, சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசிய பொருளாகக் கொள்ளப்படும்.

2) ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மட்டும் வசதி செய்து கொடுத்தல்.

3) ஏபிஎம்சி (AFMC –– Agriculture and Fisheries Marketing Corporation) என்றழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிகளின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.

ஆக, மண்டி அதாவது சந்தை முறையை ஒழித்துக் கட்டுவதாகவே இருக்கிறது. இந்த மூன்றாவது அம்சம் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தே விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஏபிஎம்சி விவசாயிகளுக்கு உகந்ததா? என்றால் இதுவரை எந்த ஒரு விவசாயியும் லட்சாதிபதியாக உயர்ந்த வெற்றி கதை ஏதும் இல்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களும் பண்ணையாளர்களும் வசதி படைத்த முதலீட்டாளர்களும் தான் குறிப்பாக கமிஷன் ஏஜெண்டுகளும் தான் விவசாயிகளின் உற்பத்தி பொருளின் விலையை நிர்ணயித்து லாபத்தையே இலக்காக வைத்து சம்பாதித்து வருகிறார்கள்.

ஆக விவசாயிகளின் இந்த போராட்டம் உண்மையில் வசதி படைத்த நில உரிமையாளர்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பாதகமானது. அரசியல் செல்வாக்கு பணக்காரர்கள் புதிய சட்ட மசோதா வருவதால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்தே இப்படி விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் விவசாயிகள் நலன் காக்க மாற்று சிந்தனையுடன் யோசிக்க முடியும்!

அப்படி என்னதான் பாதகமாக இருக்கும்? அவர்களுக்கு பண வசதி இருப்பதால் மீண்டும் கட்டுப்பாடுகளை தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளலாமே!

அதுதான் முடியாது, அதை உறுதிப்படுத்தவே புதிய மசோதா வழிகாண்கிறது.

கட்டுப்பாட்டில் இருக்கும் ‘ஏபிஎம்சி’ மண்டிகளில் விவசாய பொருட்கள் விற்கப்படாமல் வெளிச் சந்தைகளில் அதிகம் விற்கப்படும். முன்புபோல் ‘செஸ்’ அல்லது மாநில வரிகள் ஏதும் கிடையாது என்பதால் எங்கே நல்ல விலை இருக்கிறதோ, அங்கே விவசாயியால் விற்கப்பட்டு விரும்பிய லாபத்தை பெற முடியும்.

முன்பு இருந்தது ஒரு தொகுப்பிற்கு மட்டுமே அரசியல்வாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் மட்டுமே விற்கப்பட, அவர்கள் அதை சந்தைப்படுத்த எங்கு வேண்டுமானாலும் கை நிறைய லாபம் தரும் விலையில் விற்க முடியும்!

விவசாயி தந்த உழைப்பு, அரசின் கிடங்கி கட்டமைப்பு, அங்கு கொண்டுவந்து சேர்த்தது அரசு, ஆனால் ஏல அடிப்படையிலோ, சந்தை முறைப்படியோ விற்பது கார்ப்பரேட் நிறுவனங்களும் கமிஷன் தரகர்களுமாக இருந்தால் சந்தை நிலவரத்தை கையகப்படுத்தி சர்வாதிகார போக்குடன் விலை நிர்ணயம் இருக்கும். இருந்தும் வந்தது என்பதை புரிந்தவர்கள் புதிய மாற்று திட்டமாக வந்துள்ள விவசாய மசோதாவை வரவேற்பார்கள்.

விவசாயிகளால் நேரடி சந்தை முறையை சரிவர உபயோகித்து லாபகரமாக விற்பனை செய்துவிட முடியுமா?

அந்த அனுபவம் சுதந்திர இந்தியாவில் எந்த விவசாயிக்கும் இருக்க வாய்ப்பே இல்லையே, என்ற வாதமும் சரிதான்.

அதற்காகத் தான் விவசாயிகள் ‘ஏபிஎம்சி’ முறையே தொடரட்டுமே, என போராடுகிறார்கள்.

இது கிட்டத்தட்ட ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோமே’ என்பது போலத்தான் இருக்கிறது.

விவசாயிகள் நலன் என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். அவர்கள் ஒவ்வொருவரும் மாதம் லட்சம் சம்பாதிக்கும் பணக்காரர்களாக உயர்ந்தால் விவசாயத்தை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆனால் இதர துறைகளில் இருக்கும் தினக்கூலி ஏழை தொழிலாளர்களின் வாங்கும் திறன் எப்படி இருக்கும்?

உணவு தானிய விலைகள் அதிகரித்தால் சாமானியனால் கட்டுப்படியாகும் விலையில் வாங்கி சாப்பிட முடியுமா?

தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது. விலையேற்றம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏதேனும் ஓர் பொருளின் விலை ‘விஷம்’ போல் ஏறி எட்டாக்கனியாக மாறினால் உடனே அவற்றை அரசே விலை நிர்ணயம் செய்து வெளிச்சந்தைகளில் இருந்து வாங்கி வந்து விலைகளை கட்டுப்படுத்தியது.

அதேபோல் புதிய மசோதாவின் பின்னணியில் சந்தை விலை மற்றும் மத்திய அரசின் நிர்ணய விலை பற்றிய தெளிவை தான் நாடு எதிர்பார்க்கிறது.

முன்பு பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கல் நடவடிக்கைக்காக மக்களும் உரையாற்றினார். இந்த ஆண்டின் ‘கொடூர அரக்கனாக’ இருக்கும் கொரோனா பெரும் தொற்றை எப்படி சமாளிப்பது என்பதை விவரிக்க நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இன்றோ நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களது வாழ்வை வளமாக்க, கொண்டு வந்ததாக கூறும் விவசாய சட்டத்திருத்த மசோதா பற்றி மக்களுக்கு முழு விளக்கம் தர வேண்டிய கட்டாயத்தை உணராமல் ஏன் தள்ளி போட்டு வருகிறார்? அரசியல் ஆதாயத்தை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு இச்சிக்கலுக்குத் தீர்வு காண முனைப்புடன் களம் இறங்கியாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *