நாடும் நடப்பும்

எல்லை சிக்கல்களின் பின்னணி என்ன?

சமீபமாக இந்தியாவிற்கு ஏற்பட்டு வரும் தலைவலி அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது – அதற்கு காரணம் எல்லை பகுதியில் அத்துமீறல்கள்.

ஒரு பக்கம் சீன ராணுவத்தின் அட்டூழியம், மறுபக்கம் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சதிகள்!

பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்த ஒப்பந்தங்களை தொடர்ந்து அத்துமீறி அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறது. தீபாவளி வாரத்தில் நமது ராணுவ வீரர்கள் நான்கு பேரும், பிரஜைகள் ஆறு பேரும் எல்லை பாதுகாப்பு படைவீரர் ஒருவரும் என ஆக மொத்தம் 11 பேரை இழந்துவிட்டோம்.

இதை தடுக்க கடும் குண்டுவீச்சை நடத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டும் விட்டோம்.

2003ல் இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் பாகிஸ்தான் அதை மதிப்பதாகவே தெரியவில்லை! நடப்பு ஆண்டு கொரோனா தொற்று பரபரப்புகளுடன் பாகிஸ்தான் எல்லை அத்துமீறல் 4052 முறை நடந்திருக்கிறது.

2021 ஜனவரி துவக்கத்தில் இருந்தே ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இரண்டாவது பிரதிநிதித்துவம் துவங்கிவிடும்.

பாகிஸ்தான் மீது எப்.ஏ.டி.எப். அமைப்பு அறிவித்த பொருளாதார முற்றுகை தணிப்பு பற்றிய ஆய்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.

ஆனாலும் பாகிஸ்தான் இப்படி தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருக்க காரணம் என்ன? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நடந்த சமீபத்து தாக்குதலில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர், அதற்குப் பின்னணி ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க எடுத்து வரும் இரும்புக்கர நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல்களாகவே தெரிகிறது.

பயங்கரவாதிகள் சமூக ஒற்றுமையைக் குலைப்பதற்காக வன்முறையைக் கையிலெடுக்கிறார்கள். இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் பொதுமக்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதால், இஸ்லாமிய வெறுப்பு மென்மேலும் வளர்கிறது. ஐரோப்பாவில் உள்ள தேசியவாதக் கட்சிகள் இத்தகைய நிகழ்வுகளைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

ஐரோப்பாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மதிப்பீடுகளின் மீதான இருமுனைத் தாக்குதல் இது. பயங்கரவாதிகளும் இதையே விரும்புகின்றனர். பிரான்ஸ், ஆஸ்திரியா போன்று பயங்கரவாதத்தால் தாக்குதலுக்கு ஆளாகும் நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளை அவர்களின் வழியில் தொடர்வதற்கு அனுமதிக்கவே கூடாது. பயங்கரவாதத் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்; பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

கருத்தியல்ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் உரிய பதிலடிகளைக் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில், பன்மைத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகிய மதிப்பீடுகளை வளர்த்தெடுக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களின் ஒத்துழைப்போடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

அந்த வகையில் இந்தியா மீது அதிகரித்து வரும் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியல்வாத சக்திகளின் சதி என்பதாக இருந்தால் அதை இந்திய அரசு உளவு துறையின் கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *