நாடும் நடப்பும்

தடுமாறும் நிறுவனங்களை நிலைநிறுத்த மோடியின் திட்டம் என்ன?

ஆண்டின் இறுதியை எட்டும்போதெல்லாம் அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் நாள் நெருங்கி விட்டதையே சுட்டிக் காட்டும்.

நடப்பு ஆண்டில் கொரோனா தோற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை எப்படி சரி செய்ய போகிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்? என்ற கேள்வியும் எழுகிறது.

சமீபத்திய ஆய்வு ஒன்று நாட்டின் உற்பத்தியில் ரூ.16 லட்சம் கோடியை முதல் 7 மாதங்களில் இழந்துள்ளோம் என்று கூறுகிறது.

வங்கி வட்டி தள்ளி வைப்பு, ஏழைகளுக்கு நிதி உதவி, இலவச உணவு தானியம் வழங்கல் என பல்வேறு நலத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியதைக் கண்டோம்.

வருவாய் இழப்பு எல்லாத் தரப்பினருக்கும் இருக்கும் கடுமையான சூழ்நிலையில் வரிச்சுமையை சமாளிக்கும் நிலையில் இல்லாத நிலையில் மத்திய அரசு துண்டு விழுந்து விடாத பட்ஜெட்டை அறிவிக்க முடியுமா?

இந்த சிக்கல்கள் ஒரு பக்கம் இருக்கையில் ரிசர்வ் வங்கி பல முக்கியமான முடிவுகளை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதற்கான வரையறைகள் வர இருக்கும் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக லட்சுமி விலாஸ் வங்கியின் துயர் தீர்க்க என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்?

தடுமாறும் வங்கிகள் மீண்டு எழ உதவிடும் வகையில் இதர பெரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கியுடன் இணைந்து செயல்பட வைப்பார்கள். அந்த வகையில் பங்குதாரர்களின் முதலீடு பத்திரமாக இருக்கும்.

1970களில் லட்சுமி விலாஸ் வங்கி இதர சிறுசிறு வங்கிகளை உதவிட தங்களுடன் இணைத்துக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் கிளைகளை உருவாக்கியது.

1997 வாக்கிலேயே கணினிமய முதலீடுகளில் கவனம் செலுத்தியது. ஓரளவு ஸ்திரமாக இருந்த அவ்வங்கி திடீரென பொருளாதார வீழ்ச்சியை காணத் துவங்கியது.

கரூரில் தலைமை கொண்டு இயங்கும் இந்த தனியார் வங்கியை ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மாத வர்த்தக தடையை அறிவித்தது. கூடவே சிங்கப்பூர் அரசு முதலீடு செய்துள்ள டிபிஎஸ் வங்கியானது லட்சுமி விலாஸ் வங்கியை வாங்கி தங்களுடன் இணைத்துக் கொள்ள முன் வந்துள்ளது.

டிபிஎஸ் சிங்கப்பூர் நிறுவனத்தில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் கருப்பு பணம் முதலீடாக இருக்கிறதா? வைப்புத் தொகையாகவும் இருக்கலாம்! அந்த தொகையை இப்படி மறைமுகமாக நம்நாட்டு வங்கியை குறைந்த முதலீட்டில் வாங்கிக்கொள்ள இப்படி ஒரு சதியா? என்ற சந்தேக கேள்வியும் எழுகிறது.

வங்கிகள் இணைப்பின் போது பங்குகள் வர்த்தக தடை அறிவிக்கப்படும், அதாவது அப்பங்குகளின் மதிப்பு நீக்கப்படும். லட்சுமி விலாஸ் வங்கியின் பங்கு விலை தற்போது ரூ.7.50 காசுக்கு கிடைக்கிறது!

இப்படி ஒரு வங்கியின் விலை குறைய மத்திய அரசு அனுமதித்தது ஏன்? அதே அளவுகோளை யெஸ் வங்கிக்கும் செயல்படுத்தாதது ஏன்? அப்போது ரிசர்வ் வங்கி விசேஷச முதலீட்டை ‘முன்னெடுப்பு நிதியூட்டம்’ செய்ததே, அதனால் தானே அவ்வங்கியின் பங்கு விலை சரியவில்லை!

அதேபோன்று லட்சுமி விலாஸ் வங்கிக்கும் ஒரு குழுவை அமைத்து நிதியூட்டம் செய்து எழுந்து நிற்க வைத்து இருக்கலாமே? ஆனால் குறைந்த முதலீட்டில் வெளிநாட்டு அரசு வங்கி குறுக்கு வழியில் இந்திய எல்லைக்குள் பரந்து விரிந்து செயல்பட வைக்க காரணம் என்ன?

பல வங்கிகள் இந்த கடுமையான பொருளாதார சூழ்நிலையில் தடுமாறிக் கொண்டிருக்கையில் எல்லாத் தரப்பு வங்கிகளுக்கும் ஒரு வரையறையுடன் செயல்படுத்தப்படும் திட்ட நெறிகள் அவசியமாகிறது.

எச்டிஎப்சி, ஐசிஐசிஐ போன்ற ஜாம்பவான் வங்கிகளுக்கு முன்னோடியாக பொருளாதார தளர்வு வந்த 1990லேயே தனியார் வங்கியாக அங்கீகரிக்கப்பட்ட லட்சுமி விலாஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதை பொருட்படுத்தாமல் அது தடுமாறிக் கீழே விழட்டும் என்று மெத்தனமாக இருந்ததால் இன்று அவ்வங்கியின் பல்லாயிரம் ஊழியர்களும் பங்கு முதலீட்டாளர்களும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இதே நிலையில்தான் நமது நாட்டின் பாரம்பரியமான “ஏர் இந்தியா” விமான நிறுவனமும் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஏர் இந்தியாவை விற்றுவிட பிரதமர் மோடி தனது முதல் ஆட்சிக் காலத்திலேயே நடவடிக்கைகள் எடுத்தார், ஆனால் வாங்க யாரும் முன் வரவில்லை!

வாங்க முன் வருபவருக்கு போடப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகள் தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒத்துவராததாகும். ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு கூடாது, வாங்கியவர் மத்திய அரசின் அனுமதியோடு மட்டுமே வேறு முதலீட்டாளரை சேர்த்துக்கொள்ள முடியும், ‘ஏர்- இந்தியா’ பெயரையும் மாற்ற முடியாது!

தங்கள் தலை மீது இருந்த ரூ.30,000 கோடி கடனையும் மோடி அரசு ஏற்ற பிறகு உள்ள கடன் ரூ. 23,000 கோடியாக இருக்கிறது. அச்சுமையுடன் வரும் ‘ஏர் இந்தியா’வை வாங்கி லாபம் சம்பாதிக்க முடியுமா?

மொத்தத்தில் புதிதாக சம்பாதித்து லாபகரமாக இயங்குவதில் கவனம் செலுத்துவதுடன் பணம் வீரயமாகிக் கொண்டிருக்கும் பல்வேறு அரசு நிறுவனங்களின் கசிவைத் தடுக்க திட்டங்கள், முதலீடுகள் எப்படி வரப்போகிறது. என்பதை வர இருக்கும் பட்ஜெட் முனைப்புக் காட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *