செய்திகள்

ரெயில் நிலையத்தில் மேற்கு வங்க அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சு: காயத்துடன் உயிர் தப்பினார்

கோல்கட்டா, பிப்.18–

ரெயில் ஏறச்சென்ற அமைச்சர் ஜாகிர் ஹூசைன் மீது மர்ம ஆசாமிகள் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சராக ஜாகிர் ஹூசைன் உள்ளார். இவர் நேற்றிரவு கோல்கட்டா செல்வதற்காக முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள நிமிதா ரயில் நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து அமைச்சருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தினார்கள். வெடிகுண்டு வீச்சில் காயமடைந்த அமைச்சர் ஜாங்கிபுர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., உள்பட இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து நிமிதா ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். தாக்குதல் குறித்து மேற்கு வங்க போலீசார் விசாரிக்கின்றனர். வெடிகுண்டு வீச்சுக்கு திரிணாமுல் காங்கிரசின் அரசியல் எதிரிகள்தான் காரணம் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான மலே கடாக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், பாரதீய ஜனதாவின் தேசிய பொது செயலாளர் மற்றும் மேற்கு வங்காளத்திற்கான மத்திய கண்காணிப்பாளரான கைலாஷ் விஜய்வர்க்கியா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி கோயல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைந்து திரும்ப பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதேபோன்று விஜய்வர்க்கியா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கொள்கிறேன் என கூறியுள்ளார்.

சிஐடி விசாரணை

மேற்கு வங்காள சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. கொல்கத்தாவில் உசைன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சென்று அவருக்கு ஆறுதல் வழங்கினார். உடன் இருந்த மருத்துவர்களிடம் உசைனுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *