செய்திகள்

காஞ்சீபுரத்தில் 89 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.5.78 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆணையத்தலைவர் ஜான் மகேந்திரன் வழங்கினார்

Spread the love

காஞ்சீபுரம், பிப்.14-–

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் வு.ஜான் மகேந்திரன், 89 சிறுபான்மையின பயனாளிகளுக்குரூ.5.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நல பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் வு.ஜான் மகேந்திரன் தலைமையில் துணைத் தலைவர் ஜபமாலை இருதயராஜ் ளுது, உறுப்பினர் செயலர் டாக்டர் சுரேஷ்குமார், மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பாக 14 பயனாளிகளுக்கு இலவச தையல் யந்திரங்களும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக 75 பயனாளிகளுக்கு நிதியுதவிகள் என மொத்தம் 89 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.5.78 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் வு.ஜான் மகேந்திரன் வழங்கினார்.

இக்கூட்டத்தில் வு.ஜான் மகேந்திரன் பேசியதாவது:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 10.96 சதவிகிதம் சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். சிறுபான்மையின மக்களுக்காக சமூக பொருளாதார கல்வி மேம்பாடு அடையும் பொருட்டு பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2019–2020ம் கல்வியாண்டில் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 11,876 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு பரிசீலனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் 77 பயனாளிகளுக்கு ரூ.1.62 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவக்கப்பட்டு இதுவரையில் 1819 ஏழை, எளிய முஸ்லிம் மகளிருக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுபான்மையின கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் ரூ.10 லட்சம் நிதி திரட்டப்பட்டு அரசின் இணை மானியம் கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கிறித்துவ பிரிவினர் புனித பயணமாக ஜெருசலேம் சென்று வர அரசு நிதியுதவி, கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட லோன் மேளா முகாம்களில் 230 நபர்களிடமிருந்து ரூ.130.12 லட்சத்திற்கான கடனுதவி மனுக்கள் பெறப்பட்டு மேல்நடவடிக்கைகாக டாம்கோ கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கான மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் 40 நபர்களுக்கு 46 நாட்கள் இலவச திறன் வளர்ச்சி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்காக இலவச திறன் வளர்ப்பு பயிற்சியாக 50 பயனாளிகளுக்கு 3 மாதங்கள் எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாரதப் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தில் சிறுபான்மையர்களின் கல்வி வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும், பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புகளில் சம பங்கினை அளிக்கவிருப்பதை உறுதிபடுத்தும் பொருட்டும், அந்தந்த துறைகளின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய இலக்கினை எட்ட அனைத்து துறைகளுக்கும் மாவட்ட ஆட்சியரால் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிறுபான்மையின மக்களுக்கு அனைத்து சிறப்பு நலத்திட்டங்களும் சென்று பயனடைய துறை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பை நல்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, காஞ்சிபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *