செய்திகள்

எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம்

Spread the love

சென்னை, ஜன. 7–

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்க எம்.ஜி.ஆர். மன்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அ. தமிழ்மகன் உசேன் முன்னிலையில் நடைபெற்றது.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் ஆ. இளவரசன் தலைமை வகித்தார்.

பொருளாளர் வரகூர் அ. அருணாச்சலம் வரவேற்று பேசினார்.

அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், ஜெ.சி.டி. பிரபாகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் வைகைச்செல்வன், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் புரசை கோ. செல்வம், இணைச் செயலாளர் என். நல்லுசாமி, திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் கரைபுதூர் ஏ. நடராஜன், எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சி.வி. ராஜேந்திரன், எம்.எல்.ஏ., திருநெல்வேலி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன், எம்.எல்.ஏ ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை குழு உறுப்பினர் கா. சங்கரதாஸ், கழக அமைப்புச் செயலாளர் வி. சோமசுந்தரம், கழக மீனவர் பிரிவுச் செயலாளர் நீலாங்கரை எம்.சி. முனுசாமி, கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக செய்தித் தொடர்பாளர் டாக்டர் கோ. சமரசம், கழக செய்தித் தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் கா. லியாகத் அலிகான், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் டி.கே.எம். சின்னையா, மாதவரம் வி.மூர்த்தி, பி.என். ராமச்சந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள் ஏ.ஜெயபால், எம்.எஸ். பாண்டியன், எம்.கே.செல்வராஜ், எழிச்சூர் இ.வி. ராமச்சந்திரன், கே.சி. ஆணிமுத்து, எஸ்.எம். சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஆர்.வி. செல்வகுமார் நன்றி கூறினார்.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதலிடம்

கடந்த ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் அகில இந்திய மாநிலங்களிலேயே தமிழகம் முதலிடம் பெற்று சிறப்போடு விளங்குகிறது என்று மத்திய அரசு ஆய்வு செய்து மாநிலங்களின் தர வரிசை பட்டியல் வெளியிட்டிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். ஆளுமைமிக்க நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதலிடம்,

நீதி, நிர்வாகம் மற்றும் பொது பாதுகாப்பில் தமிழகம் முதலிடம், பொது உள் கட்டமைப்பு, சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளில் தமிழகம் முதலிடம், வேளாண்மை உற்பத்தி, சுகாதார மேம்பாடு, போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் தமிழகம் முதலிடம், பெண்களுக்குப் பாதுகாப்பு, குழந்தைகள் பாலின வன்கொடுமை ஒழிப்பு, தொழில் உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் கல்வித் துறையில் தமிழகம் சிறப்பிடம்.

இது போன்ற அனைத்துத் துறைகளிலும் அளப்பரிய சாதனைகளை வென்று வரலாறு படைத்த அம்மா அரசுக்கும் மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது.

வெளிநாடு பயண வெற்றிக்கு பாராட்டு

கடந்த ஆண்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 நாட்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, 41 நிறுவனங்களுடன் 8830 கோடி ரூபாய்க்கான தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு ஒப்பந்தம் போட்டு, 37,300 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிய ஒப்பற்ற சாதனைகளுக்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த பாராட்டையும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டு தமிழகத்தின் உள் கட்டமைப்புக்கு 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை சிகாகோ நகரில் உறுதி செய்தும், தமிழகத்தின் குடிநீர், வீட்டுவசதி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வாஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியும், ஹூஸ்டன் நகர இந்திய தூதரகத்தில் அந்நாட்டு தொழிலதிபர்களுடன் கலந்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைத்தும் பயணத்தில் வெற்றிகண்ட ஓ.பி.எஸ்.க்கு பாராட்டையும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் உளமாற தெரிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆற்றல், அரும்பணி, தமிழகம் உயர கண் துஞ்சாத கடும் உழைப்பு ஆகிய சிறப்புகளைப் போற்றும் வண்ணம் அவருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகம் சார்பாக டாக்டர் பட்டமும், எப்.எம். வானொலி ‘‘சிறந்த அரசியல் ஆளுமை விருதும்’’ வழங்கி பெருமை பெற்றுள்ளார். அத்தகு சிறப்பைப் பெற்ற முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். அமெரிக்கப் பயணத்தின் போது ‘வளர்ந்து வரும் தலைவர் – ஆசியா’, ‘‘தங்க தமிழ்மகன்” உட்பட சிறப்பான விருதுகள் பெற்றமைக்காக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.க்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

வாக்காளர்களுக்கு நன்றி

மக்களாட்சி நிர்வாகத்திற்கு அடித்தளமாய் விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நாடும், ஏடும் போற்றும் வகையில் நடத்தி, ஜனநாயகக் கடமையை நிரூபித்துக் காட்டிய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு இக்கூட்டம் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.

எதிரிக் கட்சிகள் குறிப்பாக கருணாநிதி கட்சி திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துக் கொட்டி அந்த கட்சிக்கே உரிய பித்தலாட்ட அரசியலையும், சதிகளையும் தாண்டி உள்ளாட்சி அமைப்புகளின் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 41.55 சதவீத வாக்குகளை பெற்றும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் 34.99 சதவீத வாக்குகளை பெற்றும், மகத்தான வெற்றியை கண்ட அண்ணா தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வீரர்களுக்கு பாராட்டையும், வாழ்த்துக்களையும், அவர்கள் வெற்றி பெற வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியையும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.

நலத்திட்டங்கள், கலைநிகழ்ச்சிகள்

இந்திய எல்லைகளையும் தாண்டி உலகளவில் கோடான கோடி மக்களின் உள்ளங்களில் இதய தெய்வமாய் நீங்கமற கொலு வீற்றிருக்கிற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் வருகிற (ஜனவரி) 17-ந் தேதி அன்றும், அத்தகைய வரலாற்று நாயகரின் அரசியல் வாரிசும், அவர் உருவாக்கிய பேரியக்கத்தை ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட உருக்குக் கோட்டையாக்கி, இந்தியத் துணைக் கண்டத்தில் ஈடு இணையற்றத் தலைவியாக மக்கள் பேராதரவுடன் 6 முறை முதலமைச்சராக பதவி ஏற்று சாதனைகள் பல புரிந்து, புகழின் உச்சிக்கே சென்ற புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24-ம் தேதி அன்றும் நாடறியும்.

அத்திரு நாட்களில் நாடெங்குமுள்ள அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் அவரவர் இருக்கும் பகுதிகளில் கழக நிர்வாகிகள், முன்னணித் தலைவர்கள் மற்றும் கழகத்தின் துணை அமைப்புக்களைச் சேர்ந்த அனைவரோடும் ஒன்றிணைந்து சிறப்பான விழா எடுத்தும், அவ்விழாவில் நலிந்தோருக்கு நல உதவி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை விளக்கும் கலை நிகழ்ச்சிகள், தெருமுனை பொதுக் கூட்டங்கள், அன்னதானம் ஆகியவை இடம் பெறும் வகையில் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.

எம்.ஜி.ஆர். மாநாடுஅனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் மாநில பொது மாநாடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் இறுதியாக கடந்த 1973–ம் ஆண்டு சேலத்தில் ஒரு வரலாற்று அத்தியாயமாகப் பிரமாண்டமாய் நடைபெற்றது. அதன் பின்பு 1986–ம் ஆண்டு மதுரை மாநகரில் வரலாற்று சிறப்புமிக்க மாநாடு நடத்தப்பட்டது.

அதே போல் ஒரு சிறப்பான மாநாட்டை நடத்துவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஆகியோரின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மீண்டும் ஒரு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற மாநில பொது மாநாடு நடைபெற ஆவன செய்யுமாறு அவர்களை இக்கூட்டம் அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் காலியாக உள்ள எம்.ஜி.ஆர். மன்ற பதவிகளை பூர்த்தி செய்து விரைவில் அறிவித்திட இக்கூட்டம் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறது.

தமிழ்மகன் உசேனுக்கு பாராட்டு

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் செயலாளரும், கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், முன்னாள் வக்ப் வாரியத் தலைவருமான அ. தமிழ்மகன் உசேனுக்கு கடந்த நவம்பர் 1–ம் தேதியன்று ‘‘தமிழ்நாடு நாள்” விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருக்கரத்தால் ‘‘எல்லைக் காவலர்” நினைவு விருது வழங்கப்பட்டது.

அத்தகைய சிறப்புக்கும், நமது மிகுந்த பாசத்திற்கும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தை யாவரும் போற்றும் வகையில் திறம்பட நடத்திவருபவருமான அ. தமிழ்மகன் உசேன் தனது வாழ்நாளில் 65 ஆண்டுகள் சுயநலமற்ற பொது சேவையைப் பாராட்டியும், தொடர்ந்து தொய்வின்றி ஆற்றிய மகத்தான மக்கள் நலத் தொண்டிற்காகவும், குமரி மாவட்டத்தை தாய்த் தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்தில் சிறை சென்றதன் மூலம் அவரது நாட்டு நலப் பணிக்காகவும், அகில உலக பத்திரிகை ஊடகச் சங்கம் (யுனிவர்செல் பிரஸ் மீடியா எஜூகேஷன் வித்யாபித்) அமைப்பு அவருக்கு ‘‘கௌரவ டாக்டர்” பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. அப்பெருமையைப் பெற்றமைக்காக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் சார்பில் தமிழ்மகன் உசேனுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *