செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் தீர்மானம்

Spread the love

விழுப்புரம், பிப்.15-

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் செஞ்சி கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, முத்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ சோதனைகளையும் தாண்டி இந்த இயக்கம் இன்றைக்கு மக்களுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் விசுவாசம் உள்ள தொண்டர்கள் இருக்கும் வரையில் அண்ணா தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஆகவே ஏற்கனவே உள்ள நிர்வாகிகள், தற்போது புதியதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் தொண்டர்களை அரவணைத்து செல்லுங்கள், அவர்களை மதியுங்கள். அதேநேரத்தில் கூட்டணி கட்சியினரையும் அரவணைத்து செல்லுங்கள்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியை ஆரம்பித்து விடுங்கள். மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி மலர, உள்ளாட்சி தேர்தல் வெற்றிதான் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதை உணர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். ஜெயலலிதாவின் 72–வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும். ஒவ்வொரு கிளை கழகத்திலும் அவரவர் சக்திக்கேற்ப ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், சுரே‌‌ஷ்பாபு, ராஜா, திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஷெரீப், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில், மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் துணைத்தலைவர் வேலவன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டு சேகர், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

முன்னதாக கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க., 100 சதவீதம் வெற்றி பெற அயராது பணியாற்ற வேண்டும், மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைத்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வழங்கியும், திண்டிவனத்தில் உணவு பூங்கா அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 24-ந் தேதி சென்னையில் திறக்கப்பட உள்ள ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் கலந்துகொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *