செய்திகள்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ கொரோனா தடுப்பூசி: இணையவழி கருத்தரங்கம்

சென்னை, அக். 18-

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி இந்தியாவில் 2 ஆம், 3 ஆம் கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தபட்டு, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது என காணொலி கருத்தரங்கில் கூறினர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கமலேயா நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்புட்னிக்-வி’ உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக ஆகஸ்ட் மாதம் பதிவுசெய்யப்பட்டது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஐதராபாத்திலுள்ள ரெட்டீஸ் லேபரட்டரி ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று முன்தினம், தடுப்பூசியின் இரண்டாம் மூன்றாம் கட்ட ஆய்வுகளை நடத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், அது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் நோக்கில், சென்னையிலுள்ள ரஷ்ய அறிவியல் பண்பாட்டு மையமும், டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரியும் காணொலி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில், தென்னிந்திய ரஷ்ய தூதர், ஓலிஜ் என் அவ்திவ் பேசும்போது, ‘ஸ்புட்னிக்-வி’ ரஷ்யாவில் 3வது கட்ட ஆய்வில் உள்ளது. இந்த தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பரிசோதனை செய்யபட்டுள்ளது. முதல் மற்றும் 2 ஆம் கட்ட ஆய்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ள நிலையில், இந்தியாவில் 2 வது 3 வது கட்ட ஆய்வுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய சூழலில், ஸ்புட்னிக்-வி சிறப்பாக செயல்பட, ரஷ்யா தேவையான தரவுகளை வழங்கும் என்றார்.

நிகழ்ச்சியில் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி மருத்துவ ஆய்வு மேம்பாட்டுத் துறையின் தலைவர் டாக்டர் லலித் லஹ்வாணி பேசியதாவது:-

‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசியானது வெக்டார் அடிப்படையில் செயல்படும் தடுப்பூசியாகும். ஒரு உடல் அணுவில் இருந்து, அடுத்த அணுவுக்கு கடத்தி எதிர்பாற்றலை கடத்துவதன் மூலம், சிறப்பான செயல்பாட்டு தன்மை கொண்டது. இது, இரண்டு வெவ்வேறு உள்ளடக்க கூறுகளை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முதல் ஊசியானது இரத்த நுண்ணுயிர் வகை 26 (serotype 26) என்ற அடிப்படையிலும், இரண்டாவது ஊசியானது இரத்த நுண்ணுயிர் வகை 5 என்ற வகையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி யின் 0.5 மில்லி தடுப்பூசி மருந்தை அடினோவைரஸ் 26 (ad26) முதலில் போடப்பட்டு, அடுத்த 21 வது நாளில் அடினோவைரஸ் (ad5)இரண்டாவது ஊசி போட வேண்டும்.

இவை உடலில் ஆண்டிபாடி எனப்படும் கோவிட்-19 நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி செயல்படும். இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு தடுப்பூசிகளை விடவும் விரைவாக உருவாக்கப்பட்டிருந்தாலும், செயல்படும் தன்மையில், சிறப்பான எதிர்பாற்றல் உள்ளது. ரஷ்யாவில் பரிசோதனை நடத்தப்பட்டு, பதியப்பட்ட மருத்துவ தரவுகளின் வழியாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் 2 ஆம் 3 ஆம் கட்ட ஆய்வுகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. முறையான ஆய்வுகளுக்கு பிறகு, ஸ்புட்னிக்-வி இந்திய மக்களுக்கு கொரோனாவுக்கான சிறந்த தடுப்பூசியாக இருக்கும் என்றார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோய் ஆலோசகர் டாக்டர் டி. சுரேஷ் குமார் பேசியதாவது:-

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டதையடுத்து, மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது 43 பேருக்கு மட்டுமே தொற்று இருந்த நிலையில் பாதிப்பிலிருந்து குணமாவோர் விகிதம் 7.10 சதமாகவே இருந்தது. இரண்டாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ந்தேதி 1306 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் குணமாவோர் விகிதம் 11.42 விழக்காடாக இருந்தது. மே 3 ந்தேதி 3 ஆம் கட்ட ஊரடங்கின் போது 10,632 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் மீட்பு விகிதம் 26.59 ஆக உயர்ந்தது. மே 18 ந்தேதி 36,824 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் மீட்பு விகிதம் 38.29 ஆக உயர்ந்தது.

அதேபோல், முதல் தளர்வு அறிவிக்கப்பட்ட ஜூன் 30 ந்தேதி 3,34,822 பேருக்கு தொற்று இருந்த நிலையில் குணமாவோர் விகிதம் 59.07 சதவீதமாகவும், அக்டோபர் 12 ந்தேதி அறிவிக்கப்பட்ட 5 வது ஊரடங்கு தளர்வின் போது, 61,49,535 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் குணமாவோர் விகிதம் 86.36 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் உலகில் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனில், அவை மட்டுமே நிரந்தர பாதுகாப்பை தரும் என்பதுதான்.

1894 ஆம் ஆண்டு, முதன்முதலாக போலியோ தொற்று பரவல் ஏற்பட்டபோது முதல் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு பிறகு 1957 வாக்கில்தான் அதற்கு வாய்வழியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்குமே போலியா பாதிப்பு இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், எபோலா, சார்ஸ், மெர்ஸ் ஆகிய பெருந்தொற்று நோய்கள் தோன்றி முறையே 45, 18, 8 ஆன நிலையில் இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கோவிட் 19 ஏற்பட்டு ஓராண்டுக்குள்ளாகவே உலகில் 165 தடுப்பூசிகள் சோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 20 சதவீத தடுப்பூசிகள் சிறப்பான செயல்பட்டாலே போதுமானது. கோவிட் 19 தடுப்பூசிக்காக, உலகமே ஒன்றிணைந்து போராடுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்றிணைவுக்கு உதவிய கோவிட் 19 க்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ரெங்கா ரெட்டி பூர்ரி, டாக்டர் ராஜிவ் ராஜ், டாக்டர் ரவீந்தரநாத், பிரான்ஸ் நாட்டின் இவானா பால்டர் ஹலூஸ்கோவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *