செய்திகள்

எதை நிறைவேற்ற முடியுமோ அதனைத் தான் சொல்லுவோம்; நிறைவேற்றுவோம்

நாகை, டிச.10–

எதை நிறைவேற்ற முடியுமோ அதனைத் தான் சொல்லுவோம்; நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட பின் நிருபர்களுக்கு முதலமைச்சர் பேட்டி அளித்தார்.

கேள்வி: சாதிவாரிக் கணக்கெடுப்பு தேர்தல் யுக்தியாகத்தான் தமிழ்நாடு அரசு செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கின்றாரே?

பதில்: அவர் எப்போதும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய திட்டங்களெல்லாம் அப்படித்தான். நாகப்பட்டினத்தில் கலைஞர் அனல் மின்சார நிலையம் கொண்டு வருவதாகச் சொன்னார். கொண்டு வந்தார்களா? எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. எதை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் சொல்லுவோம், நிறைவேற்றுவோம். இப்போதும் சொல்கிறேன், சாதி வாரியாகக் கணக்கெடுப்போம் என்று சொல்லியிருக்கிறோம், அது நிச்சயமாக முடிவு பெறும். அனைத்து சாதிப் பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு கிடைக்க எங்கள் அரசு துணை நிற்கும்.

கேள்வி: சூரப்பா விவகாரத்தில் விசாரணைக் கமிஷன்…

பதில்: விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது, வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுதொடர்பான செய்தி தெரிவிப்பது சரியாக இருக்காது. அதற்கென்று ஒரு கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால் அங்கு கொடுக்கலாம்.

மத்திய குழு மீண்டும் வருமா?

கேள்வி: புரெவிப் புயல் பாதிப்பிற்கு மத்தியக் குழுவினரை வரவழைப்பீர்களா?

பதில்: நிவர் புயல் காரணமாக மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தவுடன் உடனடியாக அனுப்பி வைத்தார்கள். அதற்குள் புரெவிப் புயல் வந்துவிட்டது. புரெவிப் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு எங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும், எனவே, மத்திய அரசு புரெவி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை உடனடியாக வந்து பார்வையிட்டு, சேதாரங்களைக் கணக்கிட்டு தேவையான நிதியுதவி செய்ய வேண்டுமென்று மத்திய அரசிற்குக் கடிதம் கொடுத்துள்ளோம், அவர்கள் நிச்சயமாக வருவார்கள்.

கேள்வி: பேரிடர் காலங்களில் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்? அவர்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். எதிர்காலத்தில் இவ்வாறு பாதிப்பு வராமல் தூர்வாரும் பணிகள் நடக்குமா? நிவாரணம் எவ்வளவு காலத்தில் கொடுக்கப்படும்?

பதில்: தூர்வாருவது என்பது ஆழப்படுத்துவதற்குத்தான். ஏரிகள், அணைகளில் குறிப்பிட்ட அளவுதான் நீரைத் தேக்க முடியும். உபரியாக வரும் நீரை வெளியேற்றத்தான் வேண்டும். அதிகமான நீர் வரும்போது இவ்வாறு ஏற்படும். இங்குமட்டுமல்ல, உலகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இப்படித்தான். இயற்கையை எதிர்த்து யாரும் போராட முடியாது. ஆண்டவன்தான் நமக்கு துணை நிற்க வேண்டும். இயற்கை பேரிடரை யாராலும் நிர்ணயிக்க முடியாது. தற்போது மிக, மிக கனமழை பொழிந்துள்ள காரணத்தால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

8 வழிச் சாலை திட்டம்

கேள்வி: சேலம் 8 வழிச் சாலைத் திட்டம்…

பதில்: 8 வழிச் சாலைத் திட்டம் மத்திய அரசாங்கத்தின் திட்டம், நிலம் எடுப்பதுதான் மாநில அரசின் பணி. தமிழ்நாடு வளர்ந்து வருகின்ற மாநிலம். தி.மு.க. ஆட்சியில், டி.ஆர். பாலு தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சாலை அமைக்க நிலங்கள் எடுத்தார். அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? நாடு வளர்கின்றபோது, தொழிற்சாலைகள் வளர்கின்றபோது போதிய சாலை வசதி தேவை. அண்மையில் நான் அமெரிக்கா போனேன். குறைந்தது 8 வழிச் சாலைதான், ஆனால், 10, 12, 16 வழிச் சாலைகளெல்லாம் உள்ளன.

விபத்தினால் ஏற்படும் உயிர்ச் சேதத்தைக் குறைக்க முடியும், குறைந்த காலத்தில் அதிக தூரத்தை அடைய முடியும், அத்துடன் எரிபொருள் மிச்சமாகிறது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எனவே, இதை ஒரு நீண்டகாலத் திட்டமாகக் காண வேண்டும். இதை நிறைவேற்ற 6 வருடங்களாவது ஆகும். முன்னர் 100 வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் இப்பொழுது கூடுதலாக 250 வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.இன்னும் 6 வருடங்களில் எவ்வளவு வாகனங்கள் செல்லும்? நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றவாறு சாலைகள் அமைத்தால்தான் நாம் அச்சமில்லாமல் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *