உலகில் கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது.
சீனாவில் தோன்றியதாக சொல்லப்படும் ‘கோவிட் 19’ கிருமியால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.
தொற்று தடுப்பு பணிகளில் வல்லரசு நாடுகளே தோற்று நின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் இது எதிரொலித்தது.
மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நமது நாடு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்தபட்ச பாதிப்புடன் கொரோனாவிலிருந்து விடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியாவில் 4.38 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
படிப்படியாக ஊரடங்கு நீக்கப்பட்டு இந்தியாவில் இயல்புநிலை திரும்புவது மகிழ்ச்சி.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான திட்டமிடல் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
முதல்வரின் வழிகாட்டுதல்படி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அனைத்தும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை சிறப்பாக கையாண்டன.
சமூக இடைவெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
தமிழகத்தின் கோவை, மதுரை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்று நூறுக்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.
அரசு ஒருபுறம் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்க போராடி வரும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் அதற்கு மாறான போக்கு நிலவி வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.
கடைகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள், திரையரங்குகள், பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் கறாராக கடைபிடிக்க வேண்டும்.
பூங்காக்களுக்கு உடற்பயிற்சிகளுக்காக வரும் நபர்களும், பொழுதுபோக்கிற்காக குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.
பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் உடற்பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதும், உடற்பயிற்சி செய்யும் நபர்கள் சானிடைசர் பயன்படுத்துவதும் உறுதிப்படுத்துவது அவசியம்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பற்றி உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருப்பது கவனிக்கத்தக்கது.
கேரளாவில் துவக்கத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது அதிகரித்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் வீதம் புதியதாக பாதிக்கப்பட்டு வருவதாக அம்மாநில அரசு கவலை தெரிவித்துள்ளது.
தடுப்பூசிகள் அனைத்தும் பரிசோதனை அளவில் மட்டுமே இருப்பதால் கொரோனா இரண்டாவது அலையில் சிக்காமல் இருப்பதற்கு அரசின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது மட்டுமே சிறந்த தீர்வாக இருக்க முடியும்.