போஸ்டர் செய்தி

மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று பீடு நடைபோடுகிறோம்: ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம்

Spread the love

சென்னை, பிப். 14–

அம்மாவின் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் சட்டசபையில் கூறினார்.

மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று அரசு பீடு நடைபோடுகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று 2020–21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:–

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி செயலாற்ற வல்லவரே, செயல் திறன் படைத்தவர் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகி, நிதி ஆதாரங்களை வெகுவாகப் பெருக்கி, அனைத்து துறைகளுக்கும் அதனை ஒதுக்கித் தந்து, நாடு வளம் பெறச் செய்து, எதிர்வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் பொடிப்பொடியாக்கி, துடைத்து தூரத் தள்ளி, மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்டு செயலாற்றி தமிழ்க்குடியை மேலும் மேலும் முன்னேற்றவும்,

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்திடவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா, தனது வாழ்க்கையை முழுவதையும் தமிழக மக்களுக்கே ஈந்து, அரும்பாடுபட்டு, பெரும் பெருமையைப் பெற்றார்.

‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்னும் லட்சிய முழக்கத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்நாள் கடமை எனக் கொண்டு இரவு பகல் பாராமல், ஓய்வென்பதே இன்றி செயலாற்றி, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த, எங்கள் அம்மாவின் உழைப்பிலும், தியாகத்திலும் பூத்த அம்மாவின் அரசை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்பாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஏழையரிடம் அன்பு செலுத்தி, எளியவர்க்கு ஆதரவு காட்டி, தாய்க்குலத்திற்குப் பெருமை தந்து, மகளிர் அதிகாரம் பெற்றிட வழி வகுத்து, தமிழக மக்கள் அனைவரும் நலமே காண தினம் உழைத்து, அவர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று, மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை வணங்கி, அம்மா விண்ணின்று எங்களை வாழ்த்தி, வழி நடத்திட வேண்டும் என வேண்டி, 2020–21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இப்பேரவை முன் சமர்ப்பிக்கின்றேன்.

தமிழகத்தை உயர்த்த…

தாய்த் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் உயர்த்த வேண்டும் என்று அம்மா கனவு கண்டாரோ, அந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற, அம்மாவின் அரசு தணியாத சாதனை தாகத்துடன் கடமையாற்றி வருகிறது. அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள், அம்மாவின் தொலைநோக்குப் பார்வையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற அவரது கொள்கையினை முன்னெடுத்துச் சென்று, தமிழ்நாட்டு மக்கள் நல் ஆளுமையின் பலன்களை முழுமையாக அடைவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம்.

மக்கள் நம்பிக்கையை பெற்றோம்

அம்மா, மூன்றாண்டுகளுக்கு முன்னர் நம்மை விட்டு நீங்கியபோது, நாம் அனைவரும் திக்கற்றவர்களாக உணர்ந்தோம். எனினும், அம்மாவின் உண்மையான தாயுள்ளம், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் காட்டியுள்ளதுடன், மக்கள் பணியாற்றும் விடாமுயற்சியில் தளராத உறுதியையும், மக்கள் சேவையைத் தொடர்வதற்கான ஆற்றலையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துச் சென்றுள்ளது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர், இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறிவிடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர். ஆனால், அம்மா காட்டிய வழியில், அவர்தம் நல்லாசிகளுடன் முதலமைச்சரின் தலைமையில் மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு, அனைத்து விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களைப் பொடிப்பொடியாக்கி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவதுமட்டுமல்லாமல், மென்மேலும் வலுவடைந்து, மக்கள் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்று, பீடுநடை போட்டு வருகிறோம். உள்நாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் அம்மாவின் அரசின் செயல்பாடுகள் மிளிர்கின்றன.

மத்திய அரசு விருது

2019ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிக்கான, நல் ஆளுமை விருதினை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதுடன், இந்தியா டுடே பத்திரிக்கையால் தொடர்ந்து இரண்டாண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வருகின்ற மாநிலம் எனவும் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கச் செய்து வருகிறோம். நிலையான, கணிக்கத்தக்க, அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரும் எளிதில் அணுகி, முறையீடுகள், ஆலோசனைகள் மற்றும் உண்மையான குறைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. நாங்கள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு வழங்கி வருகின்றோம். நாங்கள் சமூகத்தில் உள்ள மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் குறைகளையும் போக்கி வருகின்றோம். அறிஞர்களின் மதிநுட்ப ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் அறிவுரைகளின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

முதலீடு செய்ய ஆர்வம்

ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்ந்த அறிவுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். பல பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகவும் விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசினை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம்.

நம் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து திறம்பட நிலைநாட்டி, மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் நல்வாழ்வு வாழ்வதை இவ்வரசு தொடர்ந்து உறுதி செய்யும். தொடர்ச்சியாகப் பெறப்படும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும், மக்களுக்கு மேன்மேலும் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்கித் தரும். ஏழை எளியோர், நலிவுற்றோர் மற்றும் அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதை இந்த அரசு முனைப்புடன் உறுதி செய்யும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்னும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அடங்கியுள்ளன.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *