சினிமா செய்திகள் முழு தகவல்

“ஜோடியாக நடிச்சோம்…” அண்ணனா மதிச்சோம்…!”

தமிழ் சினிமாவின் ஜென்டில்மேன் ஆக்டர் என அழைக்கப்படும் ஜெமினி கணேசனுக்கு இந்தாண்டு 100வது பிறந்த நாள். அவருடன் இணைந்து நடித்த நடிகைகள் தங்களது அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டனர். ஜெமினிக்கு ஜோடியாக நடிச்சோம் நிழலில். ஆனால் ‘‘ அண்ணனாகத் தான் மதித்தோம் நிஜத்தில்…’’என்று சினிமாவின் பொற்கால நாயகிகள் கே.ஆர்.விஜயா, விஜயகுமாரி, காஞ்சனா, சச்சு ஆகியோர் நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.

“வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் ஜெமினிக்கு தங்கையாக நடித்தேன். இதே படம் இந்தியில் எடுக்கப்பட்டது. அதில் நடிக்க வாசன் கேட்டார். எனக்கு இந்தி தெரியாது என்பதால் நான் மறுத்துவிட்டேன். நான் இந்தி சொல்லிக் கொடுக்கிறேன் தங்கச்சி. நீ நடிக்க ஒத்துக்கொள் என்றார் ஜெமினி. அவர் தான் இந்தி சொல்லிக் கொடுத்து என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தார்.

“வஞ்சிக்கோட்டை வாலிபன்” படத்தில் மேட்டில் இருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்து இறப்பது போல் என் கேரக்டர் இருந்தது. அந்த பள்ளம் 15 அடி இருக்கும்.

தங்கச்சி பாரு… நான் உருண்டு காட்றேன் என்று சொல்லி… ஜெமினி அதில் உருண்டு நடித்து காண்பித்தார். பயமில்லாம கண்ணமூடிட்டு உருண்டு நடிச்சிரு தங்கச்சி என்றார்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் ஷூட்டிங்கின் போது சாப்பிடுவதற்கு எனது அப்பா நான்வெஜ் வாங்கி வந்து காரில் வைத்திருப்பார். இவர் சத்தமில்லாமல் போய் சாப்பிட்டு விட்டு வந்துவிடுவார். ஹாய்…! தங்கச்சி சாப்பாடு நல்லாயிருந்தது. அப்பா வாங்கி வந்ததெல்லாம் நான் சாப்பிட்டு விட்டேன் என்பார்.

“லேடீஸ்” மாதிரி நடிக்கிறீங்க…

நாங்கள் அழுகிற சீன்களுக்காக கிளிசரின் போட்டுக்கொள்வோம். அவர் கிளிசரின் இல்லாமலேயே அழுது விடுவார்.

என்ன அண்ணா நீங்க பாடல்களில் லேடீஸ் மாதிரி நடிக்கிறீங்க என்று கேட்பேன். ஏய் …சும்மா இரு… என்று சொல்லி சிரித்து விட்டு போய்விடுவார்.

திருமண நிகழ்ச்சி ஒன்றில் நாகேஷை அழைத்து, “டேய் நாகேஷ்… இங்க வாடா… உலகத்தில தங்கச்சியே இல்லன்னு சொல்லுவியே; ஏன் தங்கச்சிய பாருடா என்று சொல்லி…” என் ஜடையை பிடித்து இழுத்து காண்பித்து சந்தோசப்பட்டார்.

“கல்யாண பரிசு” ஷூட்டிங்கின் போது சாவித்திரி அண்ணி மாலை நேரத்தில் எல்லோருக்கும் பலகாரம் கொண்டு வருவார். தலைநிறைய ஜாதிப்பூ வச்சுக்கிட்டு வைர நெக்லஸ் டாலடிக்க காரில் வந்திறங்குவார். படப்பிடிப்பு தளமே மணக்கும்.

“கற்பகம்” படத்தில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலில் என்னைத்தான் நடிக்க அழைத்தார். என் கணவர் அதற்கு அனுமதிக்கவில்லை.

அதனால் நீங்கள் விஜயாவை அனுப்பவில்லை என்றால்… நான் இன்னொரு விஜயாவை கொண்டு வருகிறேன் என்று சொல்லி கே.ஆர்.விஜயாவை அந்த படத்தில் நடிக்க வைத்தார்.

தங்கச்சி உன்ன மத்தவங்க ஏமாத்திட்டாங்கம்மா. சாவித்திரி தன்னை தானே ஏமாத்திகிட்டா என்று சொல்லுவார்.

பேர்சொல்ல ஒரு பிள்ளை வேண்டும் என்பார்கள். அது போலத்தான் ஜெமினிக்கு கமலா செல்வராஜ். அப்பாவின் பெயரையும் புகழையும் நிலைநாட்டி வருகிறார் என்றார் விஜயகுமாரி.

“இயற்கை எனும் இளைய கன்னி…”: காஞ்சனா

ஜெமினி உடனான திரைப்பயணம் குறித்து நடிகை காஞ்சனா கூறுகையில், எனது பள்ளிக்காலம் முதலே ஜெமினியை தெரியும். “பாமாவிஜயம்” ஷூட்டிங்கின் போது தான் சாந்திநிலையத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

“சவுண்ட் ஆப் மியூசிக்” என்ற படத்தின் தழுவல் தான் சாந்திநிலையம். ஊட்டி தமிழகம் ஹவுசில் தான் ஷூட்டிங். எங்களுக்கு முதல் ஷாட்டே நானும் அவரும் சண்டை போடும் சீன் தான்.

அவருடன் நடிக்கும் போது பயப்பட தேவையில்லை. ஜெமினியுடன் நடிக்கும் போது நடிகைகளுக்கு கம்பர்டபிளாக இருக்கும்.

எம்ஜிஆர் சிவாஜி என இரு பெரும் துருவங்கள் மத்தியில் தானும் இருக்கிறேன் என்று சாதித்து காட்டி “அவ்வை சண்முகி” வரை நிலைத்து நின்று உள்ளார் ஜெமினி.

“அத்தைமடி மெத்தையடி …” : கே.ஆர்.விஜயா

நான் “கற்பகம்” படத்தில் நடிப்பதற்கு முன்பே ஜெமினியை சந்தித்து இருக்கிறேன். எனது நிகழ்ச்சி ஒன்றுக்கு அவர் தலைமை தாங்கினார். அப்போது அவர் என்னைப் பார்த்து… இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கிறா…! பெரிய ஹீரோயினா வருவார் என்று வாழ்த்தினார். அது முடிந்து ஒன்றரை வருடத்தில் எதிர்பார்க்காமல் எனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது . நான் சினிமாவுக்கு வரும் போது ஜெமினியும் சாவித்திரியும் பெரிய நடிகர்கள். “கற்பகம்” படத்தில் நான் புதிய நடிகர் என்றாலும் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டார்கள்.

ஒரு தடவை அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரை புக் செய்வார்கள். தயாரிப்பாளர்கள் கஷ்டநஷ்டத்தை அறிந்து நடந்து கொள்வார். அவர் உதவி செய்வது வெளியில் யாருக்கும் தெரியாது. நான் வரும்போதே காதல் மன்னன் பட்டத்துடன் பெரிய நடிகராக இருந்தார். நிறைய படங்கள் அவருடன் நடித்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடிக்க எந்த கஷ்டமும் படவில்லை. எனது கணவரை பார்க்க வீட்டுக்கு வந்திருந்தார். சாவித்ரி உடம்பு சரியில்லாத நேரம் அது. சாவித்ரியம்மா எப்படி இருக்காங்க… ஹாஸ்பிடல் வந்து பார்க்கட்டுமா என்று கேட்டதற்கு .. வேண்டாமா அவ ரொம்ப முடியாம இருக்கிறா என்றார். தங்கையிடம் பேசுவதுபோல் என்னிடம் சகஜமாக பேசிவிட்டு சென்றார். “சரஸ்வதிசபதம்” படத்தில் சிவாஜி, ஜெமினி, நான் என மூன்று பேரும் மாற்றி மாற்றி டயலாக் சொல்லி பார்த்துக்கொள்வோம். இப்போது நினைத்து பார்த்தால் “ட்ரீம்” போல இருக்கிறது.


நெறைய விஷயம் அறிந்தவர்…!

டெல்லிகணேஷ்

‘‘நான் அதிக படங்களில் ஜெமினிகணேசனுடன் இணைந்து நடித்தது கிடையாது. ஆனால் அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. ரொம்ப இனிமையானவர். நிறைய விஷயம் அறிந்தவர்.

Hai Ganesh.. உம்மை அடிக்கடி TV யில பாக்கறேன். நல்லா நடிக்கற என்று அவர் பாராட்டியது மட்டும் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

எனது மகள் திருமண reception க்கு அழைத்தேன். Full suit ல வந்தார். நல்ல gift ஒன்றை பரிசளித்தார். மறக்க முடியாத மாபெரும் கலைஞர்’’.


“கார் ஓட்டுவதில் மன்னன்…”: சச்சு

ஸ்டேஜ் டிராமா செய்யாமல் நேரடியாக நடிக்க வந்தவர் நடிகர் ஜெமினி. “ஐந்து லட்சம்” என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து இருக்கிறேன். ஜெமினி நிறுவனம் தயாரித்த, “அவ்வையார்” படத்தில் நான் சிறுவயதில் நடித்து இருக்கிறேன். முதலில் நான் பார்த்தது ஜெமினியைதான். அவர் அறைக்கு தான் முதலில் எங்களை அழைத்து போனார்கள். என்னை பார்த்து சூட்டிகையா இருக்கா என்று சொல்லி என்னை செலக்ட் செய்தார். “ஜெமினி மாமா” என்று தான் அழைப்பேன். மயிலாப்பூர் வரும்போது எங்கள் வீட்டுக்கு வருவார். அப்போது போர்டு காரில் வருவார். சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கி கொடுங்க என்று அவரை தொந்தரவு செய்வேன். என் தொந்தரவு தாங்கமுடியாமல் நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து விடுவார். சினிமா துறையில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி மூவேந்தர்கள். அதில் ஜெமினி தனி “ட்ராக்”. திரைத்துறையில் “காதல் மன்னன்” என்ற டைட்டில் வேறு யாருக்கும் பொருந்தாது. எத்தனை பெரிய அழகான மனிதர் என்றாலும் கூட…

ஒரு சில படங்களில் சாவித்ரி கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தாலும், ஜெமினி ஈகோ இல்லாமல் நடித்தார். கதாநாயகிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருந்தாலும் ஜெமினி அதில் நடிப்பார். இரண்டு ஹீரோ சப்ஜெக்டை கூட அவர் தனி டைப்பாக மாற்றிக்கொண்டார்.

சிவாஜி, எம்ஜிஆர் இருவரும் ஜெமினியை “மாப்ளே” என்று தான் கூப்பிடுவார்கள். செட்டுக்குள் வந்த உடன் எல்லோருக்கும் “ஹாய்” சொல்லுவார். அதற்கு பிறகு ஜெய்சங்கர் அதனை பாளோப் செய்தார்.

மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவில் “நான் அவன் இல்லை” படம் ஷூட்டிங். அதில் ஜெமினி நடிக்கிறார். எனக்கும் அதே ஸ்டுடியோவில் ஷூட்டிங். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு கம்பெனியில் இருந்து கார் வந்தது. அவருக்கு வந்த காரில் டிரைவரை வேண்டாம் என்று கூறிவிட்டு, அவரே காரை ஓட்டினார்.

அப்போது, ஏய் ச்சசு இங்க வாடி… என்றார். என்ன என்றேன்.

என்னோட காரில் வாடி… என்றார்.

மாமி நீங்களும் வாங்கோ… என்று என் அம்மாவையும் ஏற்றிக்கொண்டார்.

முன்னாடி சீட்டில் அவருடன் உட்கார்ந்து கொண்டேன். குதிரை கால்களை தூக்குவது போல் கார் முன்னாடி சக்கரங்கள் எல்லாம் மேலே தூக்கிவிட்டது. அந்த அளவுக்கு காரை வேகமாக ஓட்டினார். என் அம்மா இப்படியெல்லாம் வண்டி ஓட்டக்கூடாது உனக்கு குடும்பம் இருக்கிறதப்பா என்று அறிவுரை கூறினார்.

மாமி பயப்படாதீங்கோ… “என் ட்ரைவிங் ரொம்ப ஸ்டராங்” என்று சொல்லி சிரிப்பார்.

அவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரை போய் பார்த்தேன். காதல் மன்னன்னா… உங்கள அடிச்சுக்க ஆளே இல்லே என்றேன். கண்களில் ஒரமாக கண்ணீர் கசிந்தது. காதல் ஆவது… மன்னனாவது உடம்பு சரியில்லடி என்றார். அவரை போல் நல்ல மனிதரை காண்பது அரிது.

எழுத்து, தொகுப்பு: ஷீலா பாலச்சந்திரன்

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக் குழு.

மேலும் படிக்க….

‘ஈ எறும்புக்குக் கூட… தீங்கு நினைக்காத ஆத்மா…!’ ராமனுக்கு ஒரு சபரி; எனக்கு ஒரு ஜெமினி – சிவகுமார்

கூடப் பொறக்கலை; ஆனா ஆழமான சகோதர பாசம்…! – செளகார்ஜானகி

ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது! – ஏவிஎம் சரவணன்

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *