செய்திகள்

சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கம்: 3700 தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கிய ‘கல்வியியல்’ மாணவிகள்

Spread the love

சென்னை, டிச. 2

சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கத்தில் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 3700 தமிழ்க் கலைச்சொற்களை உருவாக்கினர்.

சொல்லாக்கத்தின் மூலமே மொழியின் நலத்தைக் காக்க முடியும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில்சென்னைவிலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘சொற்குவைச் சொல்லாக்கப் பயிலரங்கம்’ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இப்பயிலரங்கின்போது கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட சொல் உண்டியலில் மாணவிகள் தாங்கள் உருவாக்கிய 3700 தமிழ்க் கலைச்சொற்களை வழங்கினார்கள். அவற்றில் சிறந்த 3 கலைச்சொற்களைத் தேர்வு செய்து அவற்றை உருவாக்கிய கு. சாலினி எச். அப்ரோஸ் பாத்திமா, செ. புவனேஸ்வரி மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக கல்லூரி மாணவிகள் தூய தமிழில் கையொப்பமிட்ட படச்சட்டகம் இயக்ககத்திற்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இப்பயிலரங்கில்விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் பொறுப்பு முதல்வர் ம.ச. தில்லைநாயகி, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க. காமராசு, சென்னைபொதிகைத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவு இயக்குநர் மா. அண்ணாதுரை, சென்னை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் முழுக் கூடுதல் பொறுப்பு இயக்குநர் சி. ஜோதிவெங்கடேஸ்வரன், தொல்காப்பியர் தமிழ்ச் சங்கத் தலைவர் புலவர் வெற்றியழகனார், சென்னைகல்லூரிக் கல்வி இயக்ககத்தின் மேனாள் உதவி இயக்குநர் அ. மதிவாணன், ‘அறிவியல் ஒளி’ மாத இதழின் இதழாசிரியர் நா. சு. சிதம்பரம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

நிறைவாக, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் பதிப்பாசிரியர் மு. கோமதிவள்ளியம்மை நன்றியுரையில், 2017-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி கணினியில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ்மொழிதான் முதன்மையிடம் பெற்றது என்பதைச் சுட்டிக்காட்டி, இப்பயிலரங்கில் பங்கு பெற்றவர்களுக்கும், பயிலரங்கம் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *