செய்திகள்

விழுப்புரம் மாவட்ட மக்களிடம் இருந்து கலெக்டர் சுப்பிரமணியன் பிரியாவிடை பெற்றார்

Spread the love

விழுப்புரம், நவ.18-

விழுப்புரம் மாவட்ட மக்களிடம் இருந்து கலெக்டர் சுப்பிரமணியன் பிரியாவிடை பெற்றார். விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், தனது பொறுப்புகளை கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் ஒப்படைத்து விட்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-

கடந்த 3 வருட காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வளர்ச்சி பணிகளையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளேன். குறிப்பாக அரசு சார்பில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டோம். வீடூர் அணையில் 40 வருடமாக இருந்த 450 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.

ஏரிகளில் கடந்த 4 மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராமத்து திட்ட பணிகளை தொடங்கி சிறப்பாக செய்துள்ளோம். 11.5 லட்சம் டன் உணவு உற்பத்தியை செய்து வேளாண் துறையில் விழுப்புரம் மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்பதையும், கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது என்பதையும் வெளிஉலகிற்கு கொண்டு சென்றுள்ளோம். விவசாயம் சார்ந்த அனைத்து அரசு திட்டங்களும் விவசாயிகளுக்கு கிடைக்க உதவி செய்து வருகிறோம்.

விவசாயம் ஒரு கண் என்றால், இன்னொரு கண்ணாக சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பணிகளை செய்துள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலே இல்லை என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் 2016-17-ல் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. அப்போது குடிநீர் பிரச்சினையை போக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த வருடமும் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் சிறப்பாக கையாண்டுள்ளோம்.

கல்வியில் விழுப்புரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலையை போக்கி முன்னேற்ற மாவட்டமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கி நடத்தவும், மாலை வேளையில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் மாதந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தி அந்த விடைத்தாள்களை வேறு பள்ளி ஆசிரியர்கள் மூலம் திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கல்வியில் சற்று முன்னேற்ற நிலைக்கு சென்றது. அதுபோல் இந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது.

இதுபோன்று நிறைய பணிகளை செய்துள்ளோம் என்ற திருப்தி எனக்கு உள்ளது. இதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். அவர்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *