சினிமா

ரெயில் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்ஷன் மசாலா!

வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார் படம் அசுர குரு. குறை சொல்ல முடியாத நடிப்பு.

சென்னைக்கு வரும் ஓடும் ரெயிலில் அனுப்பிய கோடிக்கணக்கான வங்கி பணத்தை, ரெயிலின் மேல் கூரையில் ஓட்டை போட்டு பிரித்து, உள்ளே இறங்கி மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அந்த சம்பவத்தோடு பரபரப்பாக துவங்குகிறது அசுரகுரு.

கைதேர்ந்த கொள்ளைக்காரனாக விக்ரம் பிரபு, ரெயில் கொள்ளையை அடுத்து ஹவாலா மோசடி கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார் அடுத்து பணத்தை இரட்டிப்பு செய்யும் மோசடி கும்பல் பணத்தை கொள்ளையடிக்கிறார்.

தொடர்ந்து டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்கிறார். ஆனால் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் அதை தன்னுடைய வீட்டில் அலங்காரப் பொருளாக ஆக்கி அழகு பார்த்து ரசிக்கும் மனோபாவக்காரர். ஒருவிதத்தில் மனநோயாளி.

போலீசுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் அவரை பிடிப்பதற்கு சுப்பா ராஜு தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுகிறது . ஹவாலா பணத்தை இழந்த மோசடி கும்பல், ஒரு துப்பறியும் தனிப் பிரிவை அத நாடுகிறது. போலீஸ் வலையில் விக்ரம் பிரபு சிக்கினாரா. அல்லது துப்பறியும் பெண் மகிதா நம்பியார் வசம் சிக்கினாரா.. கிளைமாக்ஸில் நடந்தது என்ன? என்பதை சொல்லியிருக்கும் கதை அசுரகுரு.

அசுரகுரு என்று அழுத்தம் தலைப்பில் இருக்கும்போது, இக்கதையில் அதே அழுத்தம் வலுவாக இல்லாமல் போனது ஒரு வருத்தமே.

ஆக்ஷன் ஹீரோ விக்ரம் பிரபு. நள்ளிரவில் ஓடும் ரெயிலில் தாவிக்குதித்து கூரையைப் பிரித்து உள்ளே இறங்கி பணத்தை கொள்ளையடிப்பது முதல் கிளைமாக்ஸில் நயவஞ்சக போலீஸ் அதிகாரி மற்றும் ஹவாலா கும்பல் தலைவன் இருவரையும் பழிவாங்கி விட்டு கொள்ளைப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு விடை பெறுவது வரை குறை சொல்ல முடியாத நடிப்பு.

ஜே எஸ் பி பிலிம்ஸ் சதீஷ் தயாரிப்பாளர். மஹிமா நம்பியார் கதாநாயகி. இளமை நாயகி.

விக்ரம் பிரபுவின் நண்பன் ஜெகன். நகைச்சுவைக்கு யோகி பாபு. துணை முதல்வர் ஓபிஎஸ், பிரதமர் மோடி இருவரின் படத்தோடு தன் படத்தை இணைத்து வைத்து டீ கடை நடத்தும் யோகி பாபு நடிக்கும் சேஷ்டை ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கும்.

ஒளிப்பதிவு ராமலிங்கம் . பின்னணி இசை சைமன் கிங். இசை கணேஷ் ராகவேந்திரா.

மாறுபட்ட ஒரு கதையை யோசித்திருக்கிறார் இயக்குனர் ராஜ் தீப். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் அது மாதிரி கைக்குழந்தையாக இருக்கும்போதே பணத்தை திருடுவதில் மோகம் கொண்ட நாயகனின் விபரீத ஆசை எங்கு போய் முடிகிறது என்பதுதான் கதை. இதற்கு ஒரு மனநோய் அடிப்படை என்று ரஷ்ய மனிதர் ஒருவரின் கதையை ஆதாரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

119 நிமிடம் ஓடும் படம்.

வலுவான திரைக்கதையும் சுறுசுறுப்பான காட்சிகளும் இருந்திருந்தால்… விக்ரம் பிரபுவின் நடிப்போடு சேர்ந்து அசுரகுரு அசத்தல் குருவாகி இருப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *