செய்திகள்

தொடர் மழை: வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது: 11 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Spread the love

விழுப்புரம், டிச.3-

தொடர் மழையின் காரணமாக வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இதனால் 11 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி அருகே உள்ளது வீடூர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 32 அடியாகும். பருவமழை காலங்களில் இந்த அணையில் தண்ணீரை தேக்கி வைத்து பாசனத்திற்காக அக்டோபர், நவம்பர் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 3,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதன் விளைவாக இந்த அணை நிரம்பவில்லை.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வீடூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனூர், பனமலைப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் பரவலாக பெய்த மழையின் காரணமாக தொண்டியாறு, வராகநதி வழியாக அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து வந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவான 32 அடியில் கடந்த வாரம் வரை 27 அடியாக நீர்மட்டம் இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வந்ததால் அணையின் நீர்மட்டம் 32 அடியாக உயர்ந்தது.

உபரிநீர் வெளியேற்றம்

தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில், அணையின் கீழ் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அணையின் 9 மதகுகளில் 3 மதகுகள் திறக்கப்பட்டு அதன் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து வந்த நிலையில் அதே அளவு தண்ணீரை அப்படியே உபரிநீராக பொதுப்பணித்துறையினர் வெளியேற்றினர்.

வினாடிக்கு 2,000 கனஅடி நீர்

தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி நீர்வரத்து வந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீரை விரைந்து வெளியேற்றும் விதமாக 5 மதகுகளை பொதுப்பணித்துறையினர் திறந்து அதன் வழியாக வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீரை உபரிநீராக வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அங்கிணிக்குப்பம், கணபதிப்பட்டு, விநாயகபுரம், ரெட்டிக்குப்பம், கயத்தூர், இளையாண்டிப்பட்டு, எம்.குச்சிப்பாளையம், இடையப்பட்டு, ஆண்டிப்பாளையம், பொம்பூர், திருவக்கரை ஆகிய 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வீடூர் அணை நிரம்பி உள்ளதால் விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அணையில் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கும் அழகை பார்வையிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் அணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு அணைக்கு ஒவ்வொரு நிமிடமும் வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் கீழ்பகுதியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அணை பகுதியில் இருந்து மேம்பாலம் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர். அதேபோல் வீடூர் அணையை கடந்து பொம்பூர் வழியாக சிறுவை கிராமத்திற்கு செல்லக்கூடிய பஸ்கள், நேற்று வீடூர் அணை வரை மட்டுமே இயக்கப்பட்டது.

வீடூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீர்வரத்தை கண்காணித்து அதற்கேற்ப உபரிநீரை அணையிலிருந்து வெளியேற்றும்படி பொதுப்பணித் துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜவஹர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். இதே போல் விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டையில் விவசாயம் செய்யப்பட்டிருக்கும் வயல்வெளிப் பகுதிகளையும், ஏதாநெமிலியில் உள்ள ஏரியின் நீர் அளவினையும், அவியூரில் ஓடும் ஆற்றுநீர்ப்படுகை, தொண்டி ஆற்றுநீர்ப்படுகை,மற்றும் செஞ்சி சங்கராபரணி ஆற்றுநீர்ப்படுகையையும் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கருணாநிதி,செஞ்சி வட்டாட்சியர், மேல்மலையனூர் வட்டாட்சியர் மற்றும் விவசாயத்துறை அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.

நெல் பயிர்கள் நீரில் மூழ்கின

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நீர் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மாவட்டத்தின் கடலோர மற்றும் தாழ்வான பகுதியான மரக்காணத்தில் வயல்வெளி பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மரக்காணம் அருகே உள்ள ஓமிப்பேர், ஆலாத்தூர், அடசல், நடுக்குப்பம், வண்டிப்பாளைம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால் நெல் பயிர்கள் மூழ்கின. உப்பளங்கள் நீரில் மூழ்கி கடல் போல காட்சியளிக்கின்றன.

இதேபோல, செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் செஞ்சி அருகே தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *