செய்திகள் முழு தகவல்

அமெரிக்க மருத்துவமனையில் படுத்தபடி ஆண்டிபட்டியில் அமோக வெற்றி

அரசியல் அறப்போரில் ‘காலத்தை வென்ற’ எம்ஜிஆர்!

எம்ஜிஆர் எப்போதும் மத்திய அரசை பகைத்து கொள்ளமாட்டார். டெல்லியில், ஹெல்த் மினிஸ்டர்களின் கருத்தரங்கம் நடக்கிறது. அதற்காக நான் டெல்லி சென்று இருந்தேன்.

எனக்கு எம்ஜிஆரிடமிருந்து போன். நாளை காலை இந்திராகாந்தியை சந்தியுங்கள் என்று… எனக்கு இக்கட்டாக இருந்தது. காரணம் அந்த நாள்…

சஞ்சய் காந்தி இறந்து, அமேதி தொகுதியில் ராஜீவ்காந்தி அமோகமாக வெற்றி பெற்று, அந்த ரிசல்ட் வந்த நாள் அது. எப்படி பிரதமர் இந்திராகாந்தியை சந்திக்க முடியும்?

எனக்கு ஒரு யோசனை தோன்றிது. மூப்பனாருக்கு போன் செய்தேன். “இந்திராகாந்தியை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்து தர முடியுமா”, என்றேன். காரணம் மூப்பனார் மீது இந்திராகாந்திக்கு நிறைய மரியாதை உண்டு. “நான் அங்கு இருப்பேன் காலையில் வாருங்கள்” என்றார் மூப்பனார்.

கடும் கோபத்தில் இந்திரா

நான் இந்திராகாந்தியை பார்க்க சென்றேன். ஒரு சிறு அறையில் இந்திராகாந்தியால் ஆட்சி கலைக்கப்பட்ட மாநில முதல்வர்கள், தலைவர்கள் என நிறைய பேர் அமர்ந்து இருக்கிறார்கள். உட்கார கூட இடமில்லை.

இந்திராகாந்தியின் பர்சனல் பிஏ பொட்டேடாரிடம் மூப்பானர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். இந்திராகாந்தி என்னை அழைத்தார்.

அவர் முன் நான் போய் அமர்ந்தபோது, அவர் முகத்தில் அவ்வளவு கோபம்.

போனவுடன், “முதலில் எம்ஜிஆர் எனக்கு நண்பரா? எதிரியா? என்று தெரிந்தாக வேண்டும்” என்று கோபத்துடன் இந்திரா கேட்டார்.

“பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்”… எம்ஜிஆர் உங்கள் நண்பர் என்பதை சொல்ல சொன்னார். எம்ஜிஆர் உங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பார்” என்றேன். ஒருவழியாக இந்திரா அமைதியானார்.

“உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது” என்று இந்திராவிடம் கேட்டேன். பிஏவை அழைத்து அவர் நம்பரை எனக்கு கொடுக்க சொன்னார். எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம் என்றார்.

சென்னைக்கு சென்று, எம்ஜிஆரை சந்தித்து சொன்னேன். எம்ஜிஆருக்கு சந்தோஷம்.

இந்திராவை அசத்திய புத்தகம்

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு. இந்திராகாந்தி அதில் பங்கேற்க டெல்லியிலிருந்து மதுரை வருகிறார். சென்னையில் அவரை வரவேற்க எம்ஜிஆர் என்னை அனுப்பி வைத்தார்.

சென்னையில் இந்திராவை வரவேற்றோம். அதற்கு அடுத்த நாள் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட தனிவிமானத்திலேயே நானும் மதுரைக்கு பயணம் செய்தேன்.

டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மெடிக்கல் கல்லூரியில் இந்திரா காந்தி அற்புதமாக பேசியிருந்தார். ஹெல்த் டிபார்ட்மென்ட் எப்படி இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

மத்திய அமைச்சர் அந்த பேச்சின் நகலை, நாடுமுழுவதும் இருக்கும் மாநில நல்வாழ்வு துறை அமைச்சர்களுக்கு அனுப்பித்தந்தார்கள். படித்து அசந்து போனேன். இதை ஒரு புத்தகமாக போட்டுவிட்டேன்.

அட்டைப்படத்தில் இந்திராகாந்தி படம், எம்ஜிஆர் படம், என்னுடைய படம். தமிழக அரசு முத்திரையுடன் புத்தகம்.

அடுத்த நாள் காலை விமானத்தில் போகும்போது, நான் இந்த புத்தகத்தையும் உடன் எடுத்துக்கொண்டு போய் இருந்தேன்.

விமானத்தில், ஆர்.வெங்கட்ராமன், மூப்பனார், ஆர்.வி.சாமிநாதன் இருக்கிறார்கள்.

விமானத்தில், இந்திராகாந்தி அம்மையாருக்கு தனி ரூம். நான் அவரது ரூம் கதவை தட்டினேன். யெஸ் கம்… உட்காருங்கள் என்றார். புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இருக்கிறோம் என்றேன். இந்திரா அசந்து போய்விட்டார். பிரதமர் அறையில் 5 நிமிடத்துக்கு மேல் இருக்க முடியாது. செக்யூரிட்டிகள் வந்து கதவை தட்டுகிறார்கள். இந்திராகாந்தி அவர்களை பார்த்து ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… என்று சொன்னார்.

பின்பு நான் வந்து என் சீட்டில் அமர்ந்து கொண்டேன். ஆர்.வி.சாமிநாதன் கிண்டல் அடித்தார். என்ன ஹண்டே … என்ன சொக்குப்பொடி போட்டாயா… நீ ஏதாவது செய்துருப்பயா என்றார்.

நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, இந்திரா மீண்டும் என்னிடம் வந்து அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு போனார். புத்தகத்தை படித்து விட்டு அவரே வந்து திருப்பி கொடுத்துவிட்டு போனார். விமானத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. இந்த சம்பவம் இந்திராகாந்தியை மகிழ்ச்சிப்படுத்தியது.


தெலுங்கு–கங்கா திட்டத்தில் என்டிஆரும்–எம்ஜிஆரும்

சென்னை மாநகரத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை. 1983ல் என்டிஆர் ஆந்திராவில் முதலமைச்சர்.

எம்ஜிஆரிடம் ஆசி வாங்க என்டிஆர் சென்னைக்கு வருகிறார். என்டிஆரை எம்ஜிஆர் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான் தெலுங்கு பேசுவேன் என்பதால், என்டிஆரிடம் தெலுங்கில் பேசினேன்.

எம்ஜிஆர் வீட்டில் டிபன் சாப்பிட நீங்கள் வரவேண்டும். எம்ஜிஆர் உங்களை கையோடு அழைத்து வரச்சொன்னார் என்றேன்.

எம்ஜிஆரின் வீட்டுக்கு என்டிஆர் வந்தவுடன், எம்ஜிஆர் என்டிஆருக்கு சால்வை அணிவித்தார்.

அவர் உடனே, அண்ணய்யா… சால்வை எல்லாம் போடுறீங்க … நான் என்ன செய்ய வேண்டும் என்றார்.

உடனே எம்ஜிஆர் கிருஷ்ணா நதிநீர் சம்மந்தமான டாக்குமெண்ட்டுகளை அவரிடம் கொடுத்தார்.

“நான் தமிழ்நாட்டு தண்ணீர் தான் குடிச்சு வளர்ந்தேன். அண்ணய்யா (எம்ஜிஆர்) சொன்னதுக்கப்புறம், “மாட்டேனு சொல்றதுக்கு யாருக்காவது தைரியம் உண்டா?” என்று சொல்லி ஐதராபத்துக்கு போன் செய்தார். தெலுங்கு–கங்கா புராஜக்ட் திட்டம் ஆன் தி ஸ்பாட்டில் உடன்பாடானது.

“தெலுங்கு–கங்கா ப்ராஜக்ட்” திட்ட துவக்க விழாவுக்கு பிரதமர் இந்திரா காந்தியை அழைப்போம்” என்றார் எம்ஜிஆர்.

ராமாராவுக்கு மத்திய அரசு மீது மனஸ்தாபம் இருந்தது. இருந்தும் எம்ஜிஆர் கேட்டுக்கொண்டதற்காக ஒத்துக்கொண்டார்.


எம்ஜிஆருக்கு மயக்கம்

1984 செப்டம்பர் 15ம் தேதி. அண்ணா பிறந்த நாள். தஞ்சை ராஜராஜ சோழன் சிலை வெளியிலிருந்து அகற்றிவிட்டு கற்பகிரகத்துக்குள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி.

இந்திராகாந்தி அம்மையார் அதில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்ஜிஆருக்கு மயக்கம் ஏற்பட்டது. சமாளித்துவிட்டார். ரத்தத்தில் யூரியாவும், கிரியாட்டிணும் மிக அதிகமாக இருந்தது. டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியம் எம்ஜிஆருக்கு ரத்த பரிசோதனை செய்தார்.

இந்திராகாந்தியின் மனிதாபிமானம்

அக்டோபர் 5ம் தேதி வீட்டில் எம்ஜிஆருக்கு உடல்நிலை மோசமடைகிறது. கிட்னி செயலிழந்து விட்டது. அப்பல்லோவில் அனுமதிக்கப்படுகிறார். அக்டோபர் 13ந் தேதி மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 17ந் தேதி எம்ஜிஆரை பார்க்க பிதமர் இந்திராகாந்தி வருகிறார்.

ராஜ்பவனில் இந்திராவை நாங்கள் சந்திக்கிறோம். நாவலரிடம், “என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள்” என்று இந்திரா கேட்கிறார்.

ஹண்டே மாலை டெல்லி சென்று, அங்கு வரும் நியூயார்க் மருத்துவர் ப்ரீட்மேனை அழைத்து வர இருக்கிறார் என்றார்.

“ஹண்டே டெல்லிக்கு எப்படி செல்வார்” என்று இந்திரா கேட்டார். தனி விமானத்தில் என்று சொன்னவுடன், “ஏன் தனி விமானத்தில் செல்கிறார். என்னுடன் வரட்டுமே” என்றார்.

ட்ரையல் பார்த்தோம்; நூலிழையில் தப்பித்தோம்

இந்திராவின் பர்சனல் செக்ரட்டரி பி.சி.அலெக்சாண்டர். அவர் எனக்கு மிகவும் நெருக்கம்.

பி.சி.அலெக்சாண்டர் உதவியுடன் எம்ஜிஆரை அழைத்து செல்வதற்கான

விமானம், ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அந்த விமானத்தை ஓட்டியவர் என் தம்பிக்கு பழக்கமானவர்.அதனால் அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.

“எம்ஜிஆரை இந்த விமானத்தில் ஏற்றுவதற்கு முன், எம்ஜிஆருக்கான படுக்கையில் செக்யூரிட்டி ஆபிசர் ஒருவரை படுக்க வைத்து ஒரு ரவுண்ட் போய் பரிசோதனை செய்வோம்” என்றேன்.

விமானம் ஒரு சுற்று சுற்றி வந்து தரையில் இறங்கியபோது, அந்த படுக்கையில் இருந்தவர் கீழே விழுந்து விட்டார். நாம் சோதனை செய்யாமல் எம்ஜிஆரை படுக்க வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும். அருகில் இருந்த பொன்னையன் ஆச்சரியப்பட்டுவிட்டார். “எப்படி இந்த ஐடியா உங்களுக்கு தோன்றியது. நம் அதிர்ஷ்டம்” என்றார்.

அமெரிக்காவும், ஆண்டிப்பட்டியும்…

அக்டோபர் 31ல் இந்திராகாந்தி கொல்லப்படுகிறார். எம்ஜிஆரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கான உதவிகளை ராஜீவ்காந்தி அரசு செய்தது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கும்போதே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, தமிழகத்திலும் தேர்தல் வருகிறது. காங்கிரஸ், அண்ணா திமுக கூட்டணி. ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் போட்டியிட்டார்.

எம்ஜிஆரின் வேட்பு மனுவுக்காக வாஷிங்டனில் தூதரை சந்தித்து, நியூயார்க் துணை தூதரக அதிகாரியை சந்தித்து, எம்ஜிஆரின் கைரேகை உறுதிப்படுத்தப்பட்டது.

பல்வேறு கஷ்டங்களுக்கு பின், எம்ஜிஆரின் வேட்புமனுவை ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் குழுவிடம் கொண்டு வந்து சேர்த்தேன்.

அமெரிக்காவில் படுத்துக்கொண்டே ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். என்னை மீண்டும் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார்.

ஆர்.எம்.வீரப்பன் விருப்பம்

1986ல் சட்டமேலவையை, எம்ஜிஆர் கலைக்க முடிவு செய்தார். இதனால் நானும், ஆர்.எம்.வீரப்பனும் பதவி இழக்கிறோம்.

இதற்கு பின் திருநெல்வலியில் இடைத்தேர்தல் வருகிறது.

திருநெல்வேலியில் ஆர்.எம்.வீரப்பன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். எம்ஜிஆர் சம்மதித்தார். அந்த தொகுதியில் சுத்தமல்லி பகுதியில் மட்டும் தேவர் சமூகத்தவர்கள் அதிகம்.

ராஜாஜி ஒரு முறை பேசும்போது, “யாருடைய அரசியல் தலைவர் படங்களை வீட்டில் எந்த அறையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பசும்பொன்முத்துராமலிங்க தேவர் படத்தை மட்டும் பூஜை அறையில் வைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜாஜியும், பசும்பொன் முத்துராமலிங்கமும் பங்கேற்றார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கம் பேசும்போது, அரசியலில் வீரமும் விவேகமும் வேண்டும் என்று பேசினார்.

வீரம் தேவர், விவேகம் ராஜாஜி என்பதை குறிப்பிட்டு பசும்பொன்முத்துராமலிங்க தேவர் அவ்வாறு பேசினார்.

பசும்பொன்முத்துராமலிங்க தேவரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவலை யாரோ எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாரிசு மூக்கையாத்தேவர். சுதந்திரா கட்சியில் இருக்கும் போது மூக்கையாத்தேவர் தலைவர், நான் செயலாளர்.

எம்ஜிஆர் காதுக்கு இது போனது.

போன் செய்த பொன்னையன்

எம்ஜிஆர் வீட்டிலிருந்து பொன்னையன் திடீரென போன் செய்தார்.

“தலைவர் உங்களிடம் சொல்ல சொன்னார்…

நெல்லை மாவட்டத்துக்கு போங்க.

அங்கு சுத்தமல்லி பகுதியில் 14 பூத்துக்கு

நீங்க தான் இன்சார்ஜ்” என்று சொன்னார்.

நான் அங்கு போய்விட்டேன்.


முரசொலிக்கு ஓர் முற்றுப்புள்ளி 

எம்ஜிஆர் மூகாம்பிகை கோயிலுக்கு போனார்.

முரசொலியில், “அண்ணா பகுத்தறிவு பாதையில் பயணம் செய்யும் எம்ஜிஆர் கோயிலுக்கு போகலாமா?” என்று செய்தி போட்டிருந்தார்கள்.

“அந்த கோயிலுக்கு என்னுடைய தாயார் அடிக்கடி போவதுண்டு. என்னுடைய தாயை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது. எனக்கு ஒரே ஒரு கடவுள் என் தாய், நான் மூகாம்பிகை கோயிலுக்கு செல்வது அங்கே என்னுடைய தாயை பார்ப்பதற்காக. அந்த தாயை பார்ப்பதற்காக நான் சென்றது தவறு என்றால் அந்த தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். அதற்கப்புறம் கோயில் மேட்டர் ஓவர்.


உடல்நிலை சரியில்லாத போதும்…

பிரச்சாரத்துக்காக எம்ஜிஆர் வருகிறார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வந்த நேரம். உடல்நிலை சரியில்லா நேரத்திலும் வந்தார். கெஸ்ட்ஹவுஸில் தங்கி இருந்தார்.

எங்களை அழைத்தார். “இந்த தொகுதியில் என்ன பிரச்சினை?” என்றார். யாரும் வாய் திறக்கவில்லை.

நான் சொன்னேன்… “ஒரு பிரச்சினை இருக்கு சார் என்றேன். திமுக சார்பில் சுப்ரமணி நிற்கிறார். அண்ணாதிமுக நாம் நிற்கிறோம். நம் வேட்பாளர் சிவகங்கை மாவட்டம்.

உள்ளூர் வெளியூர் பிரச்சனை தான் இங்கு” என்று சொன்னேன்.

“அவ்வளவு தானே” என்றார். சரி நீங்க போங்க என்றார்.

“நெல்லை என்னை கைவிட்டதில்லை: எம்ஜிஆர்”

அவரால் அப்போது அதிகம் பேச முடியாது. அதனால், பத்திரிக்கைகளில் கொடுப்பதற்காக பேப்பரில் டைப் செய்து வைக்கப்பட்டது.

முதல் நாள் செய்தி,

“இந்த தேர்தல் சுப்ரமணிய பிள்ளைக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் நடைபெறுகின்ற தேர்தல் அல்ல.

இந்த தேர்தல் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கு நடைபெறுகின்ற அறப்போர்” என்று பேசினார்.

இந்த இரண்டு வரியில் தேர்தல் நிலவரத்தையே எம்ஜிஆர் மாற்றிவிட்டார்.

அடுத்த நாள் பத்திரிக்கைகள் அனைத்திலும்

“திருநெல்வலி தேர்தல் எம்ஜிஆருக்கும்–கலைஞர் கருணாநிதிக்கும் நடக்கும் அறப்போர்” என்று தலைப்பு இருந்தது.

இரண்டாவது நாள் செய்தி…

“நான் இன்று நெல்லைவிட்டு சென்னைக்கு திரும்புகிறேன். நெல்லை என்னை எப்பொழுதும் கைவிட்டது இல்லை என்று எனக்கு தெரியும்.

அடுத்த நாள் பத்திரிக்கைகளில், “நெல்லை என்னை கைவிட்டதில்லை”: எம்ஜிஆர்” என்று தலைப்பு வந்தது.

மக்கள் மனதில் ஆர்.எம்.வீரப்பன் வெளியூர் நபர் என்ற எண்ணத்தையே எம்ஜிஆர் எடுத்துவிட்டார். இது தான் எம்ஜிஆரின் திறமை.

அந்த தேர்தலில் ஆர்.எம்.வீரப்பன் 19 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்ஜிஆருக்கு இது தான் கடைசி இடைத்தேர்தல்.


எனக்கு ஒரு மனக்குறை 

1950ல் கிளினிக்கை ஆரம்பித்தேன். 70 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இருந்த ஓய்வு பெற்று இருக்கிறேன்.

என்னிடம் வரும் நோயாளிகளிடம் பணம் எவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்கள் என நான் கேட்டது கிடையாது. பணம் இல்லை என்று சொல்லி சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் 70 ஆண்டுகளில் ஒருவர் கூட திரும்பி சென்றதில்லை.

தாழ்த்தப்பட்ட குடிசை வாழ்மக்களுக்கு வைட்டமின் டானிக் வாங்கி வைத்துக்கொள்வேன். பலகீனமான குழந்தைகளுக்கு வழங்குவேன்.

நான் இன்னும் செய்து இருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் இன்னும் செஞ்சிருக்கணும்… நான் செய்தது போதாது என்ற குறை இன்றும் என் மனதில் இருக்கிறது.


10 அமைச்சர்கள் பதவி இழந்தோம்

சட்டமேலவையை கலைத்ததால் 10 அமைச்சர்கள் பதவி இழக்க நேரிட்டது. அதில் நானும் ஒருவன்.

1986ல், எம்ஜிஆர் முதலமைச்சர். திடீரென செயற்குழு கூட்டம் கூட்டுகிறார். 1986 அக்டோபர் 6ந் தேதி கூட்டம் நடக்கிறது.

முதலமைச்சர் பதவியுடன் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றார். எல்லாம் கைத்தட்டினார்கள்.

நான் அங்கு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்து கைக்காட்டி கூப்பிட்டார். என் முதுகை தட்டி, “ஹண்டெ துணை பொதுச்செயலாளராக இருப்பார்” என்றார்.

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.

எம்ஜிஆரின் ஆட்சியில்…

எம்ஜிஆரின் ஆட்சியில் தமிழகம் அமைதிபூங்காவாக இருந்ததால் பல தொழிற்சாலைகள் வந்தன. பொருளாதார ரீதியாக தமிழகம் அமோகமான முறையில் முன்னேற்றம் அடைந்தது.

உலகத்திலேயே தமிழகத்தில், என்ஜினீயர் கல்லூரிகள் இத்தனை இருக்கின்றன என்றால் அதற்கு எம்ஜிஆர் தான் காரணம்.

தான் வளர வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களை வளர்த்து அவர்களால் சேவை செய்வதற்கு அஸ்திவாரம் போட்டு விட்டுத்தான் எம்ஜிஆர் அமரர் ஆகியிருக்கிறார்.

பேட்டி: ஷீலா பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *