சிறுகதை

விபத்து | ப.காளிதாசன்

டமார்’ எனக் சத்தம் கேட்டது.

“ஆகா.. யாரோ ஏதோவொரு வாகனத்தில் அடிபட்டு விழுந்து விட்டார்கள்’’என… பரமேஸ்வரிக்கு புரிந்து போயிற்று .

அந்த ஊர் மெயின் ரோட்டின் அருகே வீடுகட்டி குடியிருந்து வருபவர் பரமேஸ்வரி.

இப்படி ஆவது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல ..

மாதத்தில் ஓரிரு முறை இப்படி யாராவது அடிபடுவதும் அவர்களுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் வர வைத்து ஏற்றி அனுப்பிவைத்த பிறகுதான் நிம்மதி அடைவதும் வாடிக்கை.

அவள் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சாலையில் செல்லும் வாகனங்கள் அப்படியே தெரியும்!

அன்றும் அப்படித்தான் சூரியன் இல்லாத அந்தி நேரத்தில் விபத்து நடந்த சத்தம்தான் கேட்டது.

என்ன வாகனம் எதோடு மோதியது என்பதையெல்லாம் பரமேஸ்வரியால் கணிக்க முடியவில்லை. பக்கத்தில் உள்ள கடைக்கு இரவுச் சமையலுக்கு தோசை மாவு வாங்கச் சென்ற கணவன் குமார் வந்ததும் உதவிக்கு கூட்டி போகலாம் எனத் தோன்றியது. அந்த எண்ணத்தை உடனே கைவிட்டாள்.

அவரே வெளிநாட்டில் இருந்து இப்போதுதான் ஊருக்கு வந்திருக்கிறார்.

அவரை இதற்கெல்லாம் கூப்பிட்டால் “உனக்கு வேற வேலை இல்லையா..? இப்படி அடுத்தவர்களுக்கு உதவுறேன்” என்று நாளைக்கு கோர்ட்டு கேசுன்னு அலையப்போற பாரு! என்பார்.

நாமளே போவோம் …பாவம் யாரோ எப்படி அடிபட்டுச்சோ..? என பலவாறாகச் சிந்தித்தபடியே..செல்போனை எடுத்துக்கொண்டு அரக்கப்பரக்க ஓடினாள் பரமேஸ்வரி!

விபத்து நடந்த இடம் சேர்வதற்குள் வேறு யாரோ தகவல் சொல்லிவிட்டார்கள் போல…

ஆம்புலன்ஸ் வந்து..ஆளையும் உள்ளே…ஏற்றிவிட்டார்கள்.

அடிபட்ட ஆளைப் பார்த்தாள்.அப்படியே…தலை சுற்றி அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள்.

ஏனெனில்…? விழிப்பு வந்தபோது….மருத்துவனையில் இருப்பதை உணர்ந்து கொண்டாள் பரமேஸ்வரி!

இவள் கண் விழித்தது தெரியாமல் பக்கத்து வீட்டு சுமதி அக்காவின் குரல் கேட்டது “மகராசி எத்தனையோ அடிபட்ட உசிர டயத்துக்கு ஆம்புலன்சுக்கு போன் பண்ணி காப்பாத்துனவ தாலிபாக்கியம் தலையில இவ்வளவு அடிபட்ட அவ புருஷன் உயிரை காப்பாத்தியிருச்சு…’ என்ற வார்த்தைகளைக் கேட்ட பரமேஸ்வரியின் கண்கள் மகிழ்ச்சியில் குளமானது…….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *