செய்திகள்

வெற்றிவேல் உடல் தகனம்

சென்னை, அக்.16

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் (வயது 63) சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

2011 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் அண்ணா தி.மு.க. சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். பின்னர் 2014-ல் ஜெயலலிதா, மீண்டும் போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதியை விட்டுக்கொடுத்து ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவரானார். இதையடுத்து 2016 சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா அணியை வெற்றிவேல் ஆதரித்தார். பின்னர் தினகரனுக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்கள் பிரிந்தபோது, அதில் வெற்றிவேலும் இடம்பெற்றிருந்தார். இதனால் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, அமமுகவுக்கு ஆதரவாக இருந்த வெற்றிவேலுக்கு அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.

வெற்றிவேலுக்கு கடந்த 6 ந் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேலின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மோசமானது. சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை காலமானார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெற்றிவேல் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *