செய்திகள்

சின்னசேலத்தில் 1000 ஏக்கரில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி மையம்

Spread the love

விழுப்புரம், செப்.12-

தமிழகத்தில் முதல்முறையாக விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் 1000 ஏக்கர் பரப்பில் சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தலைமை செயலாளர் கே.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிதித்துறை அரசு முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர்.கே. கோபால் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது அரசு தலைமை செயலாளர் கே.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஆட்டுப்பண்ணையில் 1000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.

உயர்கல்வி ஆராய்ச்சிக்கு உதவக்கூடிய அளவிற்கு இந்த ஆராய்ச்சி மையம் அமைய வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம்.

நாட்டு மாடு, ஆடுகளை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நான்கு பகுதிகளாக கட்டமைக்கப்படவுள்ளது. முதல் கட்டம் நாட்டு மாடுகள், ஆடுகள், கோழிகள் பராமரித்து பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். 2வது கட்டமாக மாதிரி ஆட்டு பண்ணைகளை விவசாயிகள் பார்வையிட்டு அவர்கள் சொந்தமாக பண்ணை அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 3வது கட்டமாக கால்நடை ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞான ரீதியாக உலக அளவில் பால் பதப்படுத்தும் மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். உணவு பொருள் தயாரிப்பதற்கான தரக்கட்டுப்பாடு மையம் கட்டமைக்கப்படவுள்ளது. இந்த உணவு பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பயனள்ளதாக இருக்கும். இதற்கான அலுவலக நிர்வாக கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி கட்டிடம் அமைக்கப்படவுள்ளது. 4வது கட்டமாக விரிவாக்க மையம், விவசாயிகள் வருகை புரிந்தால் பயிற்சி கொடுக்கும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்படும். அங்கு பால் பதப்படுத்த என்னென்ன உபகரணங்கள் தேவை என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்.

இந்த நான்கு கட்டமைப்புகளையும் ஒருங்கினைத்து விவசாயிகள் பயன்பெறக்கூடிய ஆடுகள், மாடுகள், கோழிகள் போன்ற கால்நடைகளை பராமரிக்கும் வகையில் இம்மையம் சிறப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த மையம் அமைவதற்கு ஒரு மாத காலத்திற்குள் மதிப்பீடு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும். அதன் பேரில் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன்,மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, கள்ளக்குறிச்சி தனி அலுவலர் கிரன் குராலா, கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மனோகரன் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *