சிறுகதை

வீரமுத்து | ராஜா செல்லமுத்து

Spread the love

பரபரவென இயங்கிக் கொண்டிருந்தது ‘சினேகா உணவு விடுதி’ ஞாயிற்றுக்கிழமை இரவு நேரம் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

‘‘அண்ணே.. ஒரு பொடிமாஸ்..’’

‘‘எனக்கு ஒரு கலக்கி..’’

‘‘எனக்கு ஒரு ஆம்லேட்.. ஆப்பாயில்..’’ என்று வாடிக்கையாளர்கள் ஆர்டர்களை வரிசை கட்டிக்கேட்டனர்.

ஏற்கனவே எரியும் கல்லில் புரோட்டாவை இடைவெளியில்லாமல் அடுக்கி வைத்திருந்தான் அன்பு.

‘‘என்ன.. கலக்கி வருமா..? வராதா..? ஆர்டர் சொல்லி அரமணி நேரமாச்சு.. – இன்னும் வந்த மாதிரி தெரியலயே – வருமா..? இல்ல.. எலைய மடக்க வா..?’’என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் பேசினான் ஒரு வாடிக்கையாளர்.

‘‘சார்.. கோவிச்சுக்கிறாதிங்க சார்.. இப்ப தான் புரோட்டா ஏத்துனேன் – அஞ்சே அஞ்சு நிமிசம் தான்.. புரோட்டாவ எடுத்த ஒடனே மொத்த ஆர்டரையும் கல்லுல ஏத்திருவேன்..’’ என்று சொல்லிக் கொண்டே ஒரு புறம் வெந்து கொண்டிருந்த புரோட்டாவைப் புரட்டிப்புரட்டி மறுபுறம் போட்டுக் கொண்டிருந்தான் அன்பு. சாப்பிட்டு முடித்தவர்களிடம் பில் பணத்தை வாங்கிக் கொண்டிருந்தான் திரு.

திருவின் அப்பா வீரமுத்து கடையின் உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். –

‘‘சாம்பார்..’’

‘‘சட்னி..’’

‘‘குருமா..’’ என்று ஆளாளுக்குக் குரல் கொடுக்க அடுப்பை விட்டு வெளியே வர முடியாமல் அன்புவும் கல்லாவை விட்டு நகர முடியாமல் திருவும் நின்றிருக்க சாம்பார், சட்னி, குருமா என்று கேட்ட கும்பலுக்குக் கோபம் வந்தது.

‘‘ஒரு ஆள வேலைக்கு போடுறானுகளான்னு பாரு.. எல எடுக்கிற ஆளே இட்லி குடுக்கிறாரு..கல்லாவுல இருக்கிறவனே.. சப்ளை பண்றான்..விளங்கும்டா.. நாளைக்கு இருந்து இந்த ஓட்டலுக்கு வரக்கூடாது..’’ என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பேசினர்.

‘‘கோவிச்சுக்கிறாதீங்க சார்.. ஏய் அப்போ… அப்போவ். அங்க என்ன பண்ணிட்டு இருக்கே..? இங்க சட்னி.. சாம்பார்.. கேட்குறாங்க. ஒன்னோட காதுல விழலியா..? இங்க வா..’’ என்று திரு எகிற தலையைச் சொரிந்து கொண்டே வெளியே வந்தார் வீரமுத்து,

‘‘என்ன என்ன வேணும்..?’’ என்று பதற்றத்துடன் கேட்டார்.

‘‘ம்ம்.. – பிரியாணி குடு..- கிறுக்குப் புடிச்ச ஆள கொண்டு வந்து இங்க வச்சிட்டு, ஒரே ரோதனையா போச்சு..’’ – என்றான் அன்பு.

பேந்தப்பேந்த விழித்தார் வீரமுத்து.

‘‘என்ன முழிச்சிட்டு நிக்கிற..? போ..போயி சாம்பார் ..- சட்னி ஊத்து..’’ என்று அன்பு சொல்ல சாம்பார் வாளியைத் தூக்கிக்கொண்டு அலைமோதினார் வீரமுத்து.

‘‘மாப்ள.. இந்த ஆளையெல்லாம் வச்சு..ஓட்டல் நடத்த முடியாதுடா.. எனக்கு தாய்மாமன்.. ஒனக்கு அப்பன் தான்.. அதுக்காக இப்படி ஒன்னும் தெரியாத ஆள வச்சிட்டு.. ம்ஹூ கும்..’’ என்று உதடு பிதுக்கினான் அன்பு.

‘‘இல்ல மாமா.. இங்க விக்கிற ஏவாரத்துக்கு.. வெளிய ஆளு வச்சு சம்பளம் குடுத்தா கட்டு படி ஆகாதுன்னு தானே அப்பாவ கூட்டிட்டு வந்திருக்கோம்..’’ – என்றபடியே வாடிக்கையாளர்களுக்குச் சாம்பார் ஊற்றிக்கொண்டிருந்தான் திரு

‘‘ஹலோ.. இங்க வாங்க.. இந்தாங்க பில் காசு..’’ என்று ஒரு சிலர் கல்லாவின் அருகே நின்று கத்திக் கொண்டிருந்தனர்.

‘‘இந்தா வர்ரேன் என்ற படியே ஓடினான் திரு..

‘‘ஏய் எப்போவ்.. அந்த எலைய எடு..’’ என்று திரு எகிறினான்.

எங்கோ விழித்தபடியே நின்று கொண்டிருந்த வீரமுத்து இலையை எடுக்க ஓடினார். அவரின் செய்கையைக் கவனித்த ஒரு வாடிக்கையாளர்,

‘‘ஐயா யாரு..?’’ என்று திருவிடம் கேட்டார்.

‘‘எங்க அப்பா..’’ என்று திரு சொன்னான். திரு சொன்னதை நம்பாமல்

‘‘சொந்த அப்பாவா..?’’ என்று மறுபடியும் கேட்டான்.

‘‘ஆமாங்க இவரு என்னோட சொந்த அப்பா தான்..’’ என்று திரு சொல்லியபடியே பில் பணத்தை வாங்கிக் கல்லாவில் போட்டான்.

‘‘பாவம்ங்க.. பாத்தா பெரிய மனுசன் மாதிரி இருக்காரு – ஆனா.. சின்னப்புள்ள மாதிரி மனசு -அவரப்போயி.. எலய எடுங்க, சாம்பார ஊத்துங்கன்னு சொல்லிட்டு, எனக்கு என்னமோ இவரப் பாத்தா வெள்ளந்தி மனுசன் மாதிரி தெரியுது.. – இவரப் போயி எப்பிடிங்க..’’ என்று அவர் இழுத்தார்.

‘‘ஆமா சார்.. எங்க அப்பாவுக்கு வயசு எழுவது – ஆனா, மனசு ஏழு வயசு சின்னப்புள்ளைக்கு இருக்கிற மாதிரி தான் இருக்கு சார்.. – ஒரு வெவரமும் தெரியாது.. ஒன்னும் தெரியாது.. என்ன பண்ண சார்-.. என்னோட சேத்து அஞ்சுபுள்ளைகளுக்கு அப்பா இவரு தான்.. எது நல்லது கெட்டதுன்னு தெரியாது சார்.. பாசம் காட்டுவாரு. சாப்பிடத் தெரியும் – நல்லா தூங்கத் தெரியும். எது சரி, எது தவறு; எதுவுமோ தெரியாது சார். சொன்னவேலையை இப்படித்தான் செய்வாரு.’’ என்று திரு சொன்னான்.

‘‘ம்ம்.. – இந்தக் காலத்துல இருக்கிற சின்னப்பயலுகளே.. ஒன்னயத் தூக்கி சாப்பிடலாமா..? என்னைய தூக்கி சாப்பிடலாமான்னு இருக்கானுக ஆனா..! ஒங்க அப்பா..பாவம்யா.. காசு போகுதேன்னு பாக்காத வேலைக்கு ஒரு ஆள வச்சிட்டு.. அவர வீட்டுல இருக்க வையி . அதான் ஒனக்கு ஆசிர்வாதம்..’’ என்று சொன்னார்.

‘‘சரி சார்.. பாக்குறேன்..’’ என்ற திரு ஒருவருக்கு சாம்பார் ஊற்ற ஓடினான்,

குருமாவ எடு, – குருமாவ எடு..’’ என்று கல்லில் நின்றபடியே கத்திக்கிக் கொண்டிருந்த அன்புவின் குரலைக் கேட்காமல், எதையோ பார்த்துக் கொண்டிருந்த வீரமுத்துவை,

‘‘ஏய்.. கிறுக்கு புடிச்ச..’’ என்று எழுத்தில் எழுதக் கூடாத கெட்ட வார்த்தையில் வீரமுத்துவைத் திட்டிய அன்பு

‘‘அங்க என்ன பாத்திட்டு இருக்கே..? அந்தக் குருமாவை எடு..’’ என்று எகிற, ஒரு குழந்தையைப் போல ஓடிப்போய் குருமா வாளியைத் தூக்கிக்கொண்டு ஓடினார் வீரமுத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *