செய்திகள்

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்தார் தேனி கலெக்டர் பல்லவி

Spread the love

தேனி, அக்.9–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி பொியாறு பாசன பகுதிகளிலுள்ள ஒரு போக சாகுபடி பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தண்ணீரை இன்று திறந்து வைத்தார்.

இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரியாறு வைகைப் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குமாறு வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை ஏற்று, பெரியாறு பாசனப் பகுதியில் ஒருபோக பாசன நிலங்களுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கும் பாசனத்திற்கு 9–ந்தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1130 கனஅடி வீதம் இன்று முதல் தண்ணீரை தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார். பொியாறு பாசன பகுதிகளிலுள்ள ஒருபோக பாசனப்பரப்பான 85,563 ஏக்கர் நிலங்களும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பகுதியான 19,439 ஏக்கர் நிலங்களும் என ஆக மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இன்று முதல் 120 நாட்களுக்கு நீர்இருப்பு மற்றும் நீர்வரத்தை கணக்கிட்டு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தண்ணீர் திறப்பால், மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர் நிலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர் நிலங்களும் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் 6,039 ஏக்கர் நிலங்களும் பாசனவசதி பெறும் என்றும் விவசாய பெருமக்கள் குறுகியகால பயிர்களை நடவுசெய்தும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தியும் அதிகமகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் (மதுரை) பி.செல்வராஜ், பொதுப்பணித்துறை (நீர் வள ஆதார அமைப்பு) பொியாறு வைகை வடிநிலகோட்ட செயற்பொறியாளர் சுப்பிரமணியன், பொியாறு பிரதான கால்வாய்க் கோட்டம் (மேலூர்) செயற்பொறியாளர் சுந்தரப்பன், பொியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயப்ரிதா, உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், குபேந்திரன், ஆனந்தன், மாயகிருஷ்ணன் வேளாண்குடி பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *