செய்திகள் வாழ்வியல்

உத்திரகோச மங்கை மங்கள நாத சுவாமி கோவில்

Spread the love

அருள்மிகு உத்திரகோச மங்கை மங்கள நாத சுவாமி திருக்கோவில், உத்திரகோசமங்கை.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்திரகோசமங்கை என்ற பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் அதிக நாள் இந்த ஆலயத்தில் தங்கி இருந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.

ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே மூலவர் நடராஜரை மரகத கோலத்தில் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் சந்தனகாப்பு சார்த்தபட்டிருக்கும்.

ஆரூதரா தரிசனம் முடிந்த அடுத்த நாள் மீண்டும் சந்தன காப்பு சார்த்தப்பட்டு அடுத்த ஆண்டு ஆரூதரா தரிசனத்தன்று மட்டுமே களையப்படும். சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர். இங்கு நடராஜர் சிலை மரகதத்தில் உள்ளது. இந்த நடராஜர் தான் ஆதி நடராஜர் என்றும் சொல்லப்படுகிறது.

இறைவன் உமையவள் மட்டும் காணுமாறு நடனம் ஆடியது உத்திகோச மங்கையில் மட்டுமே.

ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிரித்த முகமாய் இருக்கிறார்.எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல் தங்கள் ஊருக்கு கடத்தாமல் இருந்தார்கள் போலும்.

உலகத்திலேயே பெரிய மரகத கல் இதுவாக தான் இருக்கும். அம்மனுக்கு பிரணவம் (வேதம்) ரகசியமாய் உபதேசித்த இடமாம். உத்திரம் எனில் உபதேசம், ஓசம் எனில் ரகசியம்.மங்கைக்கு ரகசியமாய் உபதேசித்த இடமானதால் உத்திரகோசமங்கை எனப்பெயராம்.

இங்கு இறைவன் உமயவள்க்கு வேதம் உபதேசித்து நாட்டியமும் காட்டி அருளியதாக வரலாறு.இங்கு உள்ள நடராஜர் சபை ரத்தின சபை என்று அழைக்கப் படுகிறது.

ராமேஸ்வரம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது. ராவணன் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாய் சொல்கிறார்கள். அழகமர் வண்டோதரிக்குப் பேர் அருள் அளித்த பிரான்’ என்று சிவ பெருமானைப் பாடுகிறார் மணிவாசகர். இங்குள்ள தல விருட்சம் 3000 ஆண்டு பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. மணிவாசகர் காலம் 2-–ம் நூற்றாண்டு(கி.பி) இங்குள்ள அர்ச்சகர்கள், மற்றும் ஓதுவார்கள் சொல்கிறார்கள், இதே மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் முதலியவர்கள் எல்லாம் தவம் செய்தனர் என்றும்

பதஞ்சலி, வியாக்கிரமர்கள் கூட இங்கு இந்த மரத்தடியில் நிட்டையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இலந்த மரம் பல பல அருட்தலை முறைகளைப் பார்த்தது; மாமுனிவோர்களைத் தன் பாதவேர்களில் தாங்கியது, பல சீவன் முக்தர்களுக்கு அருள்நிழல் தந்தது என்றும் தானும் மரணம் வென்று இருப்பது, இந்த இலந்த மரம் பூமியின் மகா பொக்கிஷம்.

பெரிய தெப்பகுளம். வருடம் முழுவதும் வற்றாத தண்ணீர். உப்பு கரிக்கிறது.

திருவிளையாடற் புராணத்தில் வருகிறதே, வலைவீசி விளையாண்ட படலம் அது நடந்த இடம் இங்கே இந்த உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லையாம்; உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா 7.6.2010 அன்று நடந்தது. 66 குண்டங்கள் வளர்க்கப்பட்டு, 66 வேத ரிஷிகளுடன் பூஜைகள் நடந்தன. 640 ஆண்டிற்குப்பின் மங்களேஸ்வரி அம்மன் ஐந்து நிலை ராஜகோபுரம் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை யொட்டி மாலை மரகத நடராஜர் சிலையில் சந்தனம் களையப்பட்ட நிலையில் பச்சை மரகத மேனியாய் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் வருடம் பூராவும் சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.

ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அன்று மட்டுமே சந்தனக் காப்பு களையப் படும். அன்று பகல் முழுக்க தனிச் சபைத் தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அன்று பூராவும் ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும். இரவு மறுபடியும் காப்பு இட்ட பின் அடுத்த அபிஷேகம் என்பது அடுத்த திருவாதிரைக்குத்தான். ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில் காப்பிடப் பட்டிருந்த சந்தனத்தை பெற பக்தர்களிடையே பெரிய போட்டாப் போட்டி நடக்கும். இப்பொழுதெல்லாம் தேவஸ்தானத்திலேயே அதைப் பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள். உத்திர கோசமங்கைக் கோவிலிலும் சுரங்கம் இருந்தது. ஆனால் அவைகள் மனிதரால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல. அப்படி ஏற்படுத்தல் சாத்தியமும் இல்லை. இங்கிருந்து, சரியாகச் சொல்லப் போனால் உமாமகேச்வர சன்னதிக்குக் கீழே இருந்து அதாவது பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும் ராமேஸ்வரத்துக்கும் சுரங்க வழிகள் இருந்தன என்று கூறுகின்றனர். இக்கோவிலில் உள்ளே இருக்கும் ஓவியங்கள் பழமையானவை; அழகானவை.

தலப்பெருமைகள்

சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. எனவே உத்திர கோசமங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு. நடத்தரையர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார். மணிவாசக வள்ளலுக்குச் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைத்த இடம் இன்றளவும் ஒளி உருவில் அவர் அமர்ந்துள்ள இடம். மற்ற கோவில்களில் எல்லாம் மணி வாசகரின் திருமேனித் துறவு நிலையில் மழித்த தலையோடு வடிக்கப் பட்டிருக்கும். இங்கே அவருக்குத் தனிச் சன்னிதியே உண்டு, அதுவும் தவழும் சடாமுடிளோடு கன கம்பீரமாய் தில்லை என்பது சிதம்பரம். உத்திர கோசமங்கையோ ஆதி சிதம்பரம்.

ஆதி சிதம்பரத்தில் நடத்தரையர் திருமேனி தாபிக்கப் பட்ட அடுத்த நாள் தில்லையிலும் அது தாபிக்கப் பட்டது. இது இரண்டையும் செய்தவர்

சண்முக வடிவேலர். இங்குள்ள இரண்டு நடராசர் சிலைகளும்தான் மூலச் சிலைகள். மற்ற கோவில்களில் இந்த இரண்டையும் பார்த்து தான் நடராசர் சிலைகள் வடிவமைக்கப் பட்டன. இந்த இரண்டு சிலைகளுக்கும் கழுத்திலோ இடுப்பிலோ பாம்பு கிடையாது. தலையில் கங்கை கிடையாது. அரையில் புலித் தோலும் கிடையாது.

அருள்மிகு உத்திர கோசமங்கை, மங்களநாத சுவாமி திருக்கோவில், உத்திரகோசமங்கை – 623 533, தொலைபேசி எண்.9442757691, 04567 –221213

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *