செய்திகள்

ஆதரவற்ற மூதாட்டி உயிரிழப்பு: உதவும் கரங்கள் அமைப்பினர் நல்லடக்கம்

Spread the love

காஞ்சீபுரம், ஜன. 29-–

காஞ்சீபுரம் திருவீதிபள்ளம் பகுதியில், ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த மூதாட்டியை அப்துல்கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர் நல்லடக்கம் செய்து இறுதி சடங்கு நடத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தில் சுனாமி வந்தபோது, சென்னையை சேர்ந்த ஒரு பெண் தன் தாய், தந்தையருடன் காஞ்சீபுரம் திருவீதிபள்ளத்தில் சுகாதார வளாகம் வராண்டாவில் தஞ்சம் அடைந்தார். அப்பகுதி வாசிகள், மூவருக்கும் உணவு வழங்கி வந்தனர். வயது மூப்பின் காரணமாக, அந்த பெண்ணின் பெற்றோர், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். அவர்களை திருவீதி பள்ளத்தைச் சேர்ந்த பகுதிவாசிகளே, தங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்தனர். பெற்றோர் இறந்ததும், ஆதரவற்ற நிலையில் இருந்த பெண்ணிற்கு, மன நலம் பாதிக்கப்பட்டது. 60 வயதை கடந்த அந்த மூதாட்டிக்கு அப்பகுதி வாசிகள் உணவு அளித்து வந்தனர்.

இந்நிலையில், 25-ம் தேதி மாலை ஆதரவற்ற அந்த பாட்டி காலமானார்.

இதையறிந்த திருவீதிபள்ளம் மக்கள் பாட்டிக்கு 26ம் தேதி இறுதிச்சடங்கு நடத்த முயன்றனர். இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி வந்த அப்துல்கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினருக்கு ஆதரவற்ற பாட்டி உயிரிழந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, திருவீதிபள்ளம் பகுதிவாசிகளுடன் இணைந்த அமைப்பினர், பாட்டியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து, இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று, தேனம்பாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

இதேபோல், ஆதரவற்ற முதியோர் யாராவது இறந்தால், 7094811789 என்ற மொபைல் எண்ணில் தகவல் அளிக்கலாம் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *