போஸ்டர் செய்தி

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு

Spread the love

புதுடெல்லி,பிப்.25

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் பிரமாண்ட வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. டிரம்புக்கு முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர். முதல் நாளான நேற்று சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் மோடி சென்றார்.

பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர்.

அதன்பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். தாஜ்மகாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்பி படங்களும் எடுத்துக்கொண்டனர்.

சிவப்பு கம்ளப வரவேற்பு

இரண்டாம் நாளான இன்று டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் பங்கேற்றார். காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து வர டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் காரில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். ஒருவரையொருவர் கைகுலுக்கியதுடன், இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து டிரம்புக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அணிவகுப்பு மரியாதையை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் டிரம்புக்கு முக்கிய பிரமுகர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிமுகம் செய்து வைத்தார்.

மரியாதை செலுத்திய டிரம்ப்

இரண்டாம் நாளான இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து டிரம்ப், மெலனியா டிரம்ப் இருவரும் ராஜ்காட் சென்றனர். அங்கு காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் டிரம்ப் தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது டிரம்புக்கு காந்தி உருவச்சிலை பரிசளிக்கப்பட்டது.

டிரம்ப்- மோடி பேச்சுவார்த்தை

டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து டிரம்புக்கு பிரதமர் மோடி விருந்து அளித்து கவுரவிக்கிறார். பிற்பகல் அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் சந்திப்பு உள்ளிட்ட சில தனியார் நிகழ்ச்சிகளிலும் டிரம்ப் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது. இதன் காரணமாக மத்திய டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இன்று முற்பகல் முதல் மாலை 4 மணி வரை, மோதி பாக், சாணக்யபுரி, இந்தியா கேட், ஐ.டி.ஓ, டெல்லி கேட் மற்றும் மத்திய மற்றும் புதுடெல்லி பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டது.

சூழ்நிலைக்கு ஏற்ப போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இன்று மாலையில் சாணக்யபுரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை ரவுண்டானா, தவ்லா கான், டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி- குர்கான் சாலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் போக்குவரத்து அதிகமாக இருந்தது. எனவே அதற்கு ஏற்ப வாகன ஓட்டிகளும் பயணிகளும் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியிருந்தது.

கூடுதல் போலீஸ் குவிப்பு

மேலும், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது மோதல் ஏற்பட்டதால் இன்று அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் மாஜ்பூர் மற்றும் பிரகாம்புரியில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே, அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரகாம்புரியில் வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *