செய்திகள் வாழ்வியல்

கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைப்பதில் முக்கிய பங்காற்றும் டைப் 1, டைப் 2 நீரிழிவு நோய்

Spread the love

கோவை, நவ. 14

நோவா ஐவிஐ பெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ இயக்குநர் மனீஷ் பாங்கர், டைப் 1, டைப் 2 நீரிழிவு நோய் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டிருக்கின்றன என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:

“நீரிழிவு நோய் நீண்ட காலமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் ஒரு ஆரோக்கிய பிரச்னையாக உருவெடுத்து இருக்கிறது. மேலும், உலக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேர் இந்தியாவில் இருக்கின்றனர்.

இதனால் இந்தியாவில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் வாழ்க்கை முறையைச் சார்ந்த ஒரு நோயாக நீரிழிவு நோய் கருதப்படுகிறது.

2025ம் ஆண்டில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய ஆரோக்கியத்திற்கு கடுமையான சவாலாகி இருக்கும் இந்நோய், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, முறையற்ற உணவு மற்றும் மன அழுத்தம் உள்ள பணி முறைகள் உள்ளிட்ட பல காரணிகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, 2.6% பெண்கள் மற்றும் 3.7% ஆண்களின் 20 25 வயதுடையவர்கள் ரத்தத்தில் உயர் அல்லது மிக அதிக அளவு குளுக்கோஸ் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

உலகளவில் 180 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டு இருக்கிறது.

வழக்கத்திற்கு மாறுபட்ட மாதவிடாய் சுற்று பிரச்னைகள் மற்றும் கருத்தரிக்க இயலாமை ஆகிய பிரச்னைகளுக்காக மேற்கொள்ளும் பல்வேறு பரிசோதனைகளில் நீரிழிவு நோய் குறித்தும் கருத்தில் எடுத்து கொள்ளப்படவேண்டும்.

ஏனெனில் இந்த நவீன வாழ்க்கை முறை நோயாக உருவெடுத்து இருக்கும் நீரிழிவு நோய், கருத்தரிப்பு விகிதத்தை குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டிருக்கிறது.

அபாயகரமான பிரச்னை

நீரிழிவு நோய் சரியாகக் கட்டுப்படுத்தப்படாதபோது, அது குழந்தையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக பாதிக்கிறது. மேலும், கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் போது அபாயகரமான பிரச்னைகளையும் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு கருவுறச் செய்யும் திறன் வெகுவாக குறைகிறது. மேலும், நீரிழிவு நோயால் அவதியுறும் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாலும், விந்தணுகளின் டிஎன்ஏ சேதமடையும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாலும் கருவுறச் செய்யும் திறன் பாதிக்கப்படுகிறது. பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் கருப்பை நோய் அறிகுறி (பிசிஓஎஸ்) என்றழைக்கப்படும் ஹார்மோன் சமநிலையின்மையுடன் நீரழிவு இரண்டாம்நிலை பிரச்னையாக வரக்கூடும்.

இதனால் பெண்கள் இயற்கையாக கருத்தரிப்பது தொடர்பான பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். கர்ப்ப காலத்தில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. இருப்பினும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில், முறையான கண்காணிப்புகளுக்குள் இருக்கும்போது, அந்நோயினால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் இயற்கையாகவே கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், கருத்தரிப்பு சிகிச்சை முறைகளான ஐவிஐ மற்றும் ஐவிஎப் போன்றவை கருத்தரிப்புக்கு உதவுகின்றன. இவ்வாறு மருத்துவர் மனீஷ் பாங்கர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *